ஈராக்கில் மோட்டார் சைக்கிள் பந்தயம் சென்றுகொண்டிருந்தபோது, 17 வயது பெண் அணிந்திருந்த ஆடை கவனத்தை சிதறடிப்பதாக கூறி, ஆண்கள் கும்பல் சேர்ந்து பெண்ணை அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 


பெண்ணை தாக்கிய கும்பல்


டிசம்பர் 30 அன்று நடந்த இந்த சம்பவத்தில், பெண் ஒருவர், ஒரு கும்பலால் தாக்கப்படுவதைக் காண முடிகிறது. 17 வயது பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துரத்திச் சென்று தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சிறுமி "அநாகரீகமாக உடையணிந்து, அவர்களின் கவனத்தை சிதறடித்ததற்காக" தாக்கப்பட்டதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ரேஸில் கலந்துகொள்பவர்களின் கவனத்தை திசை திருப்புவதாக அந்த பெண் மீது ரேஸில் ஈடுபட்ட ஆண்கள் கும்பல் குற்றம் சாட்டியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. 



உயிருக்கு ஆபத்தா?


ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண் அவமானப்படுத்தப்பட்டதாகவும், அடித்து உதைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டிய டெய்லி மெயில் அறிக்கையின்படி, அவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்: நோ பாலில் ஹாட்-ட்ரிக்! ஒரே போட்டியில் ஐந்து நோ-பால் வீசிய அர்ஷ்தீப்… உருவாக்கிய மோசாமான சாதனைகள் இதோ!


உடன் வந்தவரும் தாக்கப்பட்டார்


இந்த நிகழ்வை காண அந்த பெண் வேறு ஒருவருடன் சென்றிருந்த நிலையில், அவர் அந்த பெண்ணை தாக்குவதை கண்டு தலையிட முயன்றார். அந்த ஆண் நண்பர் அந்த பெண்ணை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால் அவரையும் அந்த கும்பல் தாக்கியதாகவும், கத்தியால் குத்தப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






16 பேர் கைது


வீடியோவில், அந்த பெண் ஒரு ஓவர் கோட்டும், ஸ்கர்ட்டும் அணிந்திருப்பதைக் காணமுடிகிறது. ஆண்கள் திரளாகக் கூடி அந்த பெண்ணை தாக்கும்போது அவர் ஓட முயற்சிக்கிறார். அந்த கும்பல் முதலில் அவரை பார்த்து கத்துகிறது. அங்கு சூழ்ந்திருக்கும் பலர் அதனை வீடியோவாகப் பதிவு செய்வதையும் காணலாம். சம்பவத்தைத் தொடர்ந்து, குர்திஸ்தான் வாட்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், "சிறுமி பந்தய நிகழ்வுகளிலும் பார்வையாளராக கலந்து கொண்டதாகவும், ஆனால் அவர் அணிந்திருந்த உடை பந்தய வீரர்களின் கவனத்தை திசை திருப்பலாம் என்பதால், பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று அந்த கும்பல் கூறியது", எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.