மியான்மர் நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் ராணுவம் நடத்திய வான் வழி தாக்குதலில் 133 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 


கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மியான்மரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மியான்மரில் பொருளாதாரம் கிட்டத்தட்ட முடங்கியுள்ளது. இதனை ஒடுக்கும் வகையில் அவ்வப்போது அங்கு பொதுமக்களை குறிவைத்து ராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 3200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இதனிடையே அங்குள்ள சகாயிங் நகரின் கன்பால் நகரில் அமைந்துள்ள பாசிகி கிராமத்தில் அங்கு ராணுவ எதிர்ப்பாளர்களின் நிர்வாக அலுவலக திறப்பு விழாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மீது ராணுவ போர் விமானம் நேரடியாக குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் தாக்குதலில் படுகாயமடைந்தனர். 


மேலும் அடுத்த அரை மணி நேரத்தில்  ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 133 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணையமும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதேசமயம் இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு உலகம் முழுவதுமுள்ள மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுமியான்மரில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில் இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,  மியான்மரில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ராணுவத்தினர் வன்முறையை நிறுத்துமாறும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காணுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


அதேசமயம் ஆயுதங்கள் வைத்திருந்த இடத்தை தாக்கிய நிலையில் அது வெடித்தது. அதனால் மக்கள் இறந்தனர் என ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் வான்வழி தாக்குதலில் இறந்த பொதுமக்களின் உடல் பாகங்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடப்பதால், சரியான இறப்பு எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.