கண்டெய்னர்களை இறக்கிக்கொண்டிருக்கும்போது சரக்குக்கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக கடலுக்குள் மூழ்கியது.
துருக்கியில் எகிப்தியன் சரக்கு கப்பல் ஒன்று ஏற்றிவந்த சரக்குகளை கண்டெய்னர் கண்டெய்னராக துறைமுகத்தில் இறக்கிக்கொண்டி இருந்தது. அதிக எடை கொண்ட கண்டெய்னர்கள் கிரேன் மூலம் தூக்கி துறைமுகத்தில் இறக்கப்பட்டன. ஆனால் எடை ஒரு பக்கமாக சென்றதால் சீ ஈகிள் என்ற அந்தக்கப்பல் ஒருபக்கமாக கடலில் மூழ்கத்தொடங்கியது. சில கண்டெய்னர்கள் மட்டுமே இறக்கப்பட்ட நிலையில் கப்பலில் பல கண்டெய்னர்கள் இருந்தன. அனைத்து கண்டெய்னர்களுடனுனே கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்தக்கப்பல் 1984ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் இருந்து கண்டெய்னர்கள் இறக்கப்பட்டபோது ஊழியர்களும், அதிகாரிகளும் துறைமுகத்தில் நின்றுகொண்டு பணிகளை செய்துகொண்டு இருந்தனர். திடீரென கப்பல் நீரில் மூழ்கியதால் அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திடீரென எச்சரிக்கை விசில் சத்தம் எழுப்பப்பட்டதால் அருகில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். இதனால் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்து துருக்கி துறைமுக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே கடல்நீரில் மூழ்கியுள்ள கண்டெய்னர்களை மீட்கும் வேலையிலும் கப்பல் நிர்வாகம் முழு மூச்சாக வேலைபார்த்து வருகிறது.
இந்த விபத்துக்குறித்து தெரிவித்துள்ள துருக்கி அரசு, '' கப்பலில் சிறிய அளவிலான எண்ணெய் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 24 கண்டெய்னர்கள் நீரில் மூழ்கியது. அதனை மீட்கும் பணிகளும் நடக்கின்றன. எடை சரிசமமாக இல்லாமல் ஒரு பக்கம் எடை அதிகரித்ததே கப்பல் சரிய காரணம் என யூகிக்கிறோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளது
அமெரிக்காவில் சுழலில் சிக்கிய சிறிய கப்பலின் வீடியோவும் சமீபத்தில் வைரலானது. அமெரிக்கா மாசசூசெட்ஸ் கடற்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கப்பல் கிட்டத்தட்ட சுழலில் சிக்க நேர்ந்தது. இதையடுத்து, கப்பலில் சென்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர். செவ்வாய்கிழமை காலை, 24 அடி கப்பல் ஒன்று அதி வேக சுழலில் சிக்கி சுற்றி கொண்டிருந்தது. Fishing Vessel Finest Kind என்ற கப்பலின் கேப்டன் டானா பிளாக்மேன் இதை பார்த்து மார்ஷ்ஃபீல்ட் ஹார்பர்மாஸ்டர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
கப்பல் வட்டமிட்டு கொண்டிருப்பதை கவனித்த பின்னர் இரண்டு பேரை கடலில் இருந்து காப்பாற்றியதாகவும் கேப்டன் தெரிவித்தார். முன்னதாக, கடலில் சிக்கிய ஒருவர் தங்களை காப்பாற்றும்படி வெள்ளை நிற சட்டையை வெளியே நீட்டியபடி ஆட்டி கொண்டிருந்தார்.கப்பலில் இருந்து வெளியே குதித்த இருவர் லைப் ஜாக்கெட்டை அணிந்திருக்கவில்லை என்றும் நல்வாய்ப்பாக அவர்கள் காயமடைவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.