இந்தியா மற்றும் பாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் பப்ஜி மற்றும் டிக்டாக்கை தடை செய்ய தலிபான்கள் முடிவு செய்துள்ளனர்.


" பப்ஜி" விளையாட்டுக்கு உலகளவில் ரசிகர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் அண்டைநாடான பாகிஸ்தானில் இளைஞர்களின் ஆதரவு இன்றளவும் அதிகம். பட்டித்தொட்டி எங்கும் பப்ஜியின் நீட்சியை பார்க்க முடிந்தது. ஆனால் சீனா, செயலிகள் மூலமாக இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.


மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வன்முறையை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் பப்ஜியை தடை செய்தது. இந்த அறிவிப்பானது பப்ஜி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தாலும் , அதன் பிறகு CALL OF DUTY, FAUG-G  என நிறைய மொபைல் கேம் சந்தைப்படுத்தப்பட்டது. பல கேமிங் நிறுவனங்கள் இந்தியாவை குறிவைத்தே பல மொபைல்  கேமினை களமிறக்கினார்கள். ஆனால் அவை அனைத்தும் பப்ஜி  ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை, பப்ஜியை விட சிறந்த விளையாட்டை தங்கள் நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற போட்டா போட்டி கேமிங் நிறுவனங்கள் மத்தியில் இன்றளவும் உள்ளது. 


இந்தநிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் பப்ஜி மற்றும் டிக்டாக்கை தடை செய்ய தலிபான்கள் முடிவு செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நாட்டின் தொலைத்தொடர்பு அமைச்சகம் பாதுகாப்புத் துறை மற்றும் ஷரியா சட்ட அமலாக்க முகமை உறுப்பினர்களுடன் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு பிறகு, 90 நாட்களுக்குள் பப்ஜி மற்றும் டிக்டாக் தடைசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் இதுகுறித்து தெரிவிக்கையில், பப்ஜி தடை நடைமுறைக்கு வர 90 நாட்கள் வரை ஆகலாம் என்றாலும், ஒரு மாதத்திற்குள் டிக்டாக் தடையை நடைமுறைப்படுத்த தலிபான்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். தகவல்களின்படி, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் வரவிருக்கும் தடையை நாட்டின் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும், அது அட்டவணையின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 


ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். இவர்கள் ஆட்சிக்கு பிறகு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வந்தது. தொடர்ந்து பல்வேறு இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் கிட்டதட்ட 24.3 மில்லியன் இணையதளங்கள் தடை செய்யப்பட்டன.