விண்வெளியில் இரு அண்டங்கள் நெருங்கும் புகைப்படத்தை நாசா மற்றும் இஎஸ்ஏ-வின் ஹப்பிள் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.


ஹபிள் தொலைநோக்கி:


1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, டிஸ்கவரி என்ற ராக்கெட் உதவியுடன், ஹபிள் தொலைநோக்கி விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த தொலைநோக்கியானது அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவானது. 


ஹபில் தொலைநோக்கியானது, விண்வெளியில் நிகழும் மாற்றங்களை புகைப்படம் எடுத்து அவ்வப்போது பூமிக்கு அனுப்பி வருகிறது. இதன் மூலம், நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள சூரிய குடும்பத்தையும், ஏன் நாம் வசிக்கும் பால்வழி அண்டத்திற்கு வெளியே உள்ள அண்டங்களையும் புகைப்படம் எடுக்கும் வல்லமை கொண்டது. ஹபிளின் சாதனையாக அண்டம் விரிவடைவதை காண்பித்தது குறிப்பிடத்தக்கது


அண்டம்:


அண்டம் என்பது நட்சத்திரங்கள் அடங்கிய கூட்டமாகும். ஒரு அண்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கும். 


எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் சூரிய குடும்பத்தில் வாழ்கின்றோம். அதாவது சூரியன் ஒரு நட்சத்திரம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சூரியனை அடிப்படையாக கொண்டு பூமி உள்ளிட்ட 8 கோள்கள் சுற்றி வருகின்றன. எனவே இதை சூரிய குடும்பம் என அழைக்கிறோம். 


அதேபோன்ற கோடிக்கணக்கான சூரியன் அல்லது நட்சத்திரங்கள் சேர்ந்தது அண்டம் என அழைக்கப்படுகிறது. எனவே நாம் அண்டத்தில் எவ்வளவு சிறிய பகுதியில் வசிக்கிறோம் என்று நினைத்து பாருங்கள்.


இதைப்போன்று விண்வெளியில் எண்ண முடியாத பல அண்டங்கள் உள்ளன. நாம் வசிக்க கூடிய அண்டத்திற்கு பால்வழி அண்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 


இரு அண்டங்களின் புகைப்படம்:


சமீபத்தில் ஹபிள் தொலைநோக்கியானது, விண்வெளியில் இரு அண்டங்கள் அருகே இருப்பது போன்ற புகைப்படத்தை கச்சிதமாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த புகைப்படத்தில் இரு அண்டங்களும் விண்வெளியில் மிதப்பது போன்ற காட்சி அளிக்கிறது. 




இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், இரு அண்டங்களும் அவற்றின் ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று ஈர்த்து கொள்கின்றன என தெரிவித்துள்ளனர்.




மேலும் இதுகுறித்து தரையில் உள்ள நோக்கிகள் வைத்தும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.