காரிலிருந்து எரிபொருளை எப்படி திருடுவது என்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


க்ரீஸில் உயர்ந்த பெட்ரோல் விலை:


உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்து பணப்புழக்கமும் குறைந்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் பெட்ரோல் விற்பனை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கை நாடாளுமன்றம் பாதியிலேயே முடித்து வைக்கப்பட்டது. அதே போல பாகிஸ்தானிலும் பெட்ரோல் விலை  நேற்றும் 30 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த பெட்ரோல் பிரச்சனை ஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான க்ரீஸில் வரலாறு காணாத அளவிற்கு எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.


172 சதவீதம் பெட்ரோல் விலை உயர்வு:


அந்நாட்டின் பணவீக்கம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 11.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலையும் அதிகரித்திருக்கிறது. தற்போதைய நிலையில் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய மதிப்பில் சுமார் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் 172 சதவீதம் அதிகமாகும். அதே போல மின்சாரக் கட்டணமும் 80 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 


”பெட்ரோல் திருடுவது எப்படி?”


இந்த நிலையில் க்ரீஸில் இயங்கி வரும் ஹெல்லெனிக் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் என்ற தொலைக்காட்சி நிறுவனம், காரில் இருந்து எளிமையான முறையில் எரிபொருளை எப்படி திருடுவது என்று நேற்று காலை ஒளிபரப்பியது. அதில், செய்தியாளர் காஸ்டஸ், கார் நிபுணர் ஒருவரிடம் பெட்ரோலை திருடுவது எப்படி என்று கேட்க, ஒரு குழாயை பெட்ரோல் டேங்கில் நுழைத்த அந்த நிபுணர் பெட்ரோலை உறிஞ்சி அதை ஒரு கேனில் பிடித்து காண்பித்தார். அதே போல அந்தரத்தில் உயர்த்தப்பட்ட காரில் இருந்து பெட்ரோலை எப்படி எடுப்பது என்று விளக்கினார். 






குழாயை நீங்கள் உறிஞ்சவெல்லாம் தேவையில்லை; ஒயின் கடையில் இருந்து ஒரு பிப்பெட்டே போதும் என்று கூறியுள்ளார்.






யூடியூபிலும் வெளியாகியுள்ள இந்த காட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.



எளிமையான முறை: ”இந்த செய்முறை சிக்கலானது எல்லாம் இல்லை; இதற்காக பிரத்யேக குழாய் கூட தேவையில்லை. பால்கனியில் இருக்கும் குழாயைக் கொண்டு கூட இதைச் செய்யலாம்” என்று அந்த செய்தியாளர் விளக்கமளித்துள்ளார். தொலைக்காட்சியில் வெளியான இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தில் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாளைய எபிசோடில் 2 கிலோ சீஸ் மற்றும் ஸ்டீக்கை யாருக்கும் தெரியாமல் எப்படி திருடுவது என்று சொல்லித்தருவார்கள் என்று கூறியுள்ளார்.