சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று அதிகரித்து வருகிறது. இது கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு மற்றொரு சுகாதார நெருக்கடி குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


சீனாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. உலக நாடுகள் ஸ்தம்பித்தன. பொருளாதார நெருக்கடியில் ஒவ்வொரு நாடும் சிக்கித்தவித்தது. உலக மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். தொற்று நோயால் உலகமே லாக் டவுனில் மூழ்கி கிடந்தது. பெரும்பாலானோர் வாழ்வாதாரம், வேலையை இழந்து பரிதவித்தனர். கொரோனா வைரஸ் சீனாவின் பயோ வெபன்ஸ் என உலக நாடுகள் குற்றம் சாட்டின. இதன் சர்வ தேச விசாரணையும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. 






இந்நிலையில் மீண்டும் சீனாவில் புதுவகையான வைரஸ் பிணங்களை குவித்து வருகிறது. ஹெச்.எம்.பி.வி என்று சொல்லப்படும் வைரஸ் மீண்டும் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் கதிகலக்கத்தில் உள்ளன. மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன என்று பார்க்கலாம். 


மனித மெட்டாப்நியூமோ வைரஸ் என்பது நியூமோவிரிடே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த நெகட்டிவ் சைன்ஸ் ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும். கடந்த 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் இந்த வைரஸ் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் முதல் முதலில் கண்டிபிடிக்கப்பட்டது சுவாச தொற்றுள்ள குழந்தைகளிடம்தான். 


குழந்தைகளுக்கு நிறைய தொற்று நோய்கள் ஏற்படுவதையடுத்து நிமோனியாவாக இருக்கலாம் என எண்ணி நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம் கண்காணிப்பு குழுவை உருவாக்கியது. அப்போதுதான் அது  
மனித மெட்டாப்நியூமோ வைரஸால் உருவாகிறது என கண்டறியப்பட்டது. 


இதன் அறிகுறிகள் என்றால், இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை சொல்லப்படுகின்றன. குழ்ந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பரவும் அபாயம் அதிகம் என கூறப்படுகிறது. ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் நுறையீரல் பாதிப்பு உள்ள நோய்கள் உள்ளவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தும்மலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாகவும் இது பரவும். 



இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு முதல் 5 நாட்களில் அறிகுறிகள் தெரிய தொடங்கும். இந்த வைரஸுக்கு தடுப்பூசியே இல்லை. அறிகுறிகளை கட்டுப்படுத்த மட்டுமே சிகிச்சை தரப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


நோயை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது, இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது என்பதை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். 


உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ சுவாச தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலோ, சில நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தொடர்ந்தாலோ அல்லது மோசமடைந்தாலோ, காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தாலோ நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.