ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மேலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் குடியிருக்கும் வீடுகள், கட்டிடங்களில் ஜன்னல் வைக்க தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தனது சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், ”சமையலறைகளில், முற்றங்களில் அல்லது தண்ணீர் சேகரிக்கும் போது பெண்களைப் பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “புதிய கட்டுமானப் பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையிட்டு, அத்தகைய பகுதிகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்வார்கள். ஜன்னல்கள் பெண்கள் பணிபுரியும் பகுதிகளை தெளிவாகக் காணக்கூடிய குடியிருப்புப் பகுதிகளில், வீட்டின் உரிமையாளர்கள் சுவர்களைக் கட்டவோ அல்லது பார்வையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவோ ஊக்குவிக்கப்படுவார்கள். இது அண்டை வீட்டாருக்கு ஏற்படக்கூடிய ஏதேனும் இடையூறுகள் அல்லது சிரமங்களைத் தடுக்கும்” எனவும் தெரிவித்தார்.
ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை சட்டங்களை தலிபான் அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், பொது வாழ்வில் பெண்களின் இருப்பை மேலும் அழிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. பெண்கள் பொது இடங்களில் பாடுவதையோ, கவிதை வாசிப்பதையோ தடை செய்யும் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளனர். கூடுதலாக, சில உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் பெண் குரல்களை முற்றிலுமாக நிறுத்திவிட்டன.
ஆகஸ்ட் 2021-ல், தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். அதன் பின்னர் அது முந்தைய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட முற்போக்கான கொள்கைகளை, குறிப்பாக பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை கடுமையாக மாற்றியமைத்துள்ளது. தலிபான்களின் இந்த நடவடிக்கைகளை ஐ.நா கடுமையாக கண்டித்துள்ளது.
தாலிபானின் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் பெண்களின் உரிமைகளை கடுமையாகக் குறைத்துள்ளன, இதில் பொது வாழ்வில் பங்கேற்கும் திறன், கல்வி பெறும் திறன் மற்றும் சுதந்திரமாக வேலை செய்யும் திறன் ஆகியவை அடங்கும்.
தாலிபான்கள் இடைவிடாமல் அறநெறிச் சட்டங்களை திணிப்பது, 1990 களில் அவர்களின் ஆட்சியைப் பிரதிபலிக்கிறது, இது பெண்களின் உரிமைகள் கடுமையாக ஒடுக்கப்பட்ட காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.