நீங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டீவான ஆளா? அப்படியானால் கண்டிப்பாக கபி லேமை உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.அன்றாட வாழ்க்கையை எளிமையாக மாற்றுவது எப்படி என கூறி சில ட்ரிக் வீடியோக்களை வெளியிடும் வேடிக்கை கும்பலை , சட்டிளாக கலாய்த்து தள்ளும் 2K கிட்தான் கபி லேம். டிக்டாக், இன்ஸ்டாகிராம் , ஃபேஸ்புக் என மற்றவர்கள் போடும் வீடியோவுக்கு பதில் வீடியோவை போட்டு பிரபலமானார் கபி. எளிதாக செய்து முடிக்கும் வேலையை சிலர் டிக்டாக்கில் அறிவுப்பூர்வமாக நினைத்து செய்துகாட்டி வீடியோ போடுவார்கள். அது முட்டாள்தனமாக இருக்கும். அதனை கலாய்த்து ’இத செய்ய எதுக்குடா இவ்ளோ கஷ்டம்’ என சொல்லாமல் செய்துகாட்டிவிடுவார் கபி. குறிப்பாக அவரது உதட்டு ரியாக்ஷனுக்குத்தான் இங்கு ரசிகர்களே!
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டினை பூர்வீகமாக கொண்ட , கபி தன்னுடைய சிறு வயதிலேயே குடும்பத்துடன் இத்தாலிக்கு இடம்பெயர்ந்தவர். வேலை எதுவும் கைக்கூடாத நிலையில் , வேடிக்கையாக ஆரமித்த ஒரு விஷயம் இன்று கபியை நினைத்து பார்க்க முடியாத அளவு உச்சத்தில் வைத்திருக்கிறது. கபிக்கு ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதிலும் வில் ஸ்மித்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதே தனது இறுதி இலக்கு.
தி ஃப்ரெஷ் பிரின்ஸ் ஆஃப் பெல்-ஏர் படத்தைப் பார்த்த பிறகுதான் அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததாம் . படத்தில் நடிப்பதற்காக சில படங்கள் மற்றும் கார்டூன்களை பார்த்து , ஆங்கிலம் கற்று வருகிறாராம் கபி. விரைவில் அவரை நாம் ஹாலிவுட்டிலும் எதிர்பார்க்கலாம்!