நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின்படி, ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை மீண்டும் ஒத்தி வைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.


மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு:


2025-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி மையமான நாசா திட்டமிட்டு வருகிறது. கடந்த 2 முறை ஒத்திவைக்கப்பட்ட திட்டமானது, மீண்டும் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஐயன் புயல் எச்சரிக்கை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.






ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஓரியன் விண்கலம் உள்ளது. நிலவின் மேல்பகுதியில் நிலைநிறுத்தப்படும் ஓரியன் விண்கலமானது, நிலவின் வான்வெளியில் ஆய்வை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இது மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. 


தொழில்நுட்ப கோளாறு


நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அழைத்து செல்லும் நாசாவின் அதி சக்தி வாய்ந்த ராக்கெட், முதலில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வானில் ஏவப்பட இருந்தது. நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,  ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் தொழில்நுட்ப காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இரண்டாவதாக செப்டம்பர்-03 அனுப்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எரிபொருள் கசிவு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து மூன்றாவது முறையாக செப்டம்பர் 27-ஆம் தேதி செலுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.






மனிதர்களை அனுப்பும் திட்டம்


2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பவதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக நாசா ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் முயற்சியாக, ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடனான சோதனை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 


கடைசியாக, அப்பல்லோ 17 விண்வெளி விமானம் மூலம் விண்வெளி வீரர்கள் நிலவில் காலடி எடுத்து வைத்தனர். தற்போது, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்ட்டெமிஸ் விண்வெளித் திட்டத்தின்படி விண்வெளி ஏவுதல் அமைப்பு (SLS) ராக்கெட்டை புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்த இருந்தது.


இந்நிலையில் புயல் எச்சரிக்கை காராணமாக, தேதி குறிப்பிடப்படாமல் ராக்கெட் ஏவுதல் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வானிலை சரியான பிறகு, தகுந்த நேரத்தில் ராக்கெட் விண்வெளிக்கு செலுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.