Deadliest Disasters 2023: நடப்பாண்டில் சர்வதேச அளவில் ஏராளமான உயிர்களை பலி வாங்கிய மிக மோசமான இயற்கை பேரிடர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


2023ம் ஆண்டின் இயற்கை பேரிடர்கள்:


இன்னும் சில மணி நேரங்களில் முடிய உள்ள 2023ம் ஆண்டு நமக்கு எத்தனையோ மகிழ்ச்சியான நினைவுகளை தந்துள்ளது. விளையாட்டு, சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் என பல்வேறு பிரிவுகளிலும் தவிர்க்க முடியாத பல நேர்மறையான நிகழ்வுகள் அரங்கேறி இருக்கலாம். அதேநேரத்தில், சில மோசமான நிகழ்வுகளும் நமது கண்முன்னே அரங்கேறியதும் உண்மை தான். அந்த வகையில் 2023ல் நிகழ்ந்த மிக மோசமான இயற்கை பேரிடர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


100 பேரை பலி வாங்கிய ஹவாய் தீ விபத்து:


ஆகஸ்ட் 8ம் தேதியன்று ஹவாய் தீவிலுள்ள மாய் (maui) பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ, 3 நாட்கள் கட்டுக்கடங்காமல் எரிந்தது. அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் இதில், 100 பேர் உயிரிழந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய 5.52 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கூறப்படுகிறது.


ரவாண்டா பெருமழை:


கடந்த மே மாதம் 2ம் தேதி ரவாண்டா நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் பெய்த வராறு காணாத பெருமழையால், 5000 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. அதோடு, வெள்ள பாதிப்பில் 129 பேர் வரை உயிரிழந்தனர்.


மோச்சா புயல்:


மியான்மரில் மே 14ம் தேதி மோச்சா புயலால் மணிக்கு 130 மைல் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இந்த விபத்தில் பெரும் பொருட்சேதத்துடன் 145 பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த மோசமான புயல்களில் ஒன்றாக மோச்சா கருதப்படுகிறது.


நேபாளம் நிலநடுக்கம்:


நவம்பர் 3ம் தேதி மேற்கு நேபாளில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவானது. இந்திய மற்றும் ஆசிய டெக்டானிக் பிளேட்களின் சந்திப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், 157 பேர் உயிரிழந்தனர்.


காங்கோ வெள்ளம்:


மே மாத தொடக்கத்தில் காங்கோவின் கிழக்கு பிராந்தியத்தில் பெய்த பெருமழையால், வெள்ளத்துடன் மண் சரிவும் ஏற்பட்டது. இதில் 438 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயினர். 


மலாவி சூறாவளி:


மலாவி பகுதியில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் தொடர்ந்து ஆறு நாட்கள் டிராபிகல் புயலால் கனமழை கொட்டியது. இதன் காரணமாக நிகழ்ந்த வெள்ள பாதிப்பால் குறைந்தது 679 பேர் உயிரிழந்திருப்பர் என கூறப்படுகிறது.


ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்:


கடந்த அக்டோபர் 7ம் தேதி மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவானது. இதில் ஆயிரத்து 480 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 


மொராக்கோ நிலநடுக்கம்:


கடந்த செப்டம்பர் 8ம் தேதி மொராக்கோவின் மராகெச் பகுதிக்கு தென்மேற்கில் 45 மைல்ஸ் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவானது. அந்த பிராந்தியத்தில் பதிவான மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படும் இந்த பேரிடரால், 2 ஆயிரத்து 946 பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்து 674 பேர் காயமடைந்தனர்.


டேனியல் புயல்:


செப்டம்பர் 10 அன்று லிபியாவில் உள்ள மத்தியதரைக் கடலோர நகரமான டெர்னாவை டேனியல் புயல் அடித்து நொறுக்கியது. அதோடு பெருமழை மற்றும் கணிசமான வெள்ளம் மற்றும் நகரின் இரண்டு அணைகளை உடைத்தது. அக்டோபர் 31 நிலவரப்படி, 4,352 பேர் உயிரிழந்த நிலையில்,  8,000 பேர் இன்னும் காணவில்லை. 


55 ஆயிரம் பேரை காவு வாங்கிய நிலநடுக்கம்: 


சிரியா எல்லைக்கு அருகே தென்கிழக்கு பகுதியில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவானது. சில மணி நேரத்திலேயே 7.5 அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் துருக்கி மற்றும் சிரியாவில் சேர்த்து மொத்தமாக 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலான உயிரிழப்பு சிரியாவில் பதிவானது.