அம்மா என்றால் அன்பு. அது எந்த உயிரினமாக இருந்தால் என்ன. இதை உணர்த்தும் வகையில் அவ்வப்போது இணையத்தில் வீடியோக்கள் வெளியாவது உண்டு.


அண்மைக்காலமாக வைரலாகிக் கொண்டிருக்கும் ஒரு வீடியோ பழசுதான் என்றாலும் அம்மாவின் அன்பை பிரதிபலித்து ஆச்சர்யப்பட வைக்கிறது.


இந்த குறிப்பிட்ட வீடியோ ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் ஒரு டயருக்குள் வைக்கப்பட்டிருந்த சிறு வைக்கோல் பரப்பில் மயில் குஞ்சுகள் சில சொகுசாக அமர்ந்து இருக்கின்றன. அந்த வைக்கோலில் மயில் முட்டைகள் சிலவும் இருக்கின்றன. ஆனால், தாய் மயிலைத் தான் காணவில்லை.


அந்த டயருக்குள் ஏறி உட்காரும் கோழி, அந்த மயில் குஞ்சுகளை தனது குஞ்சுகளைப் போல் அரவணைப்போதோடு லாவகமாக மிதித்துவிடாமல் அந்த முட்டையையும் சேர்த்து அடை காக்கிறது. அன்புக்கு பிரிவினை தெரியாது என்பது இதுதான்.


நாம் சில மருத்துவமனைகளில் பார்த்திருப்போம், பாலுக்காக அழுது துடிக்கும் பச்சிளங் குழந்தைக்கு பக்கத்து படுக்கையில் இருக்கும் தாய் அமுதூட்டுவார். மனிதருக்கு ஆறு அறிவு இருப்பதால் அன்பு, இரக்கம் மேலோங்கலாம். ஆனால், இந்த கோழிக்கு என்னதான் தெரியும். இந்தக் கோழியின் அன்பு நம்மை நெகிழத்தான் செய்கிறது.


கோழி மட்டுமல்ல இதுபோன்ற பல விலங்குகள் மற்ற உயிரினங்களை ஆதரிப்பதை நாம் பார்த்திருப்போம். பூனைக் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நாய். பசு மடியில் பாலருந்து ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி என இன்னும் பல அன்புக் காட்சிகளைப் பார்த்திருப்போம்.


வெளிநாடுகளில் நாயும் பூனையையும் ஒரே வீட்டில் வளர்ப்பதைக் காண முடியும். நாம் தான் இங்கு நாயும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என்று புதிய அர்த்தம் கற்பித்து வைத்துள்ளோம். வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ அதே வீட்டிலுள்ள கோழி, கிளியை தாக்கிப் பார்த்திருக்க மாட்டோம். கிராமங்களில் வீடு தோறும் ஏதேனும் வளர்ப்புப் பிராணி இருக்கும். ஆடு, மாடு, கோழி, வாத்து, நாய், பூனை என்று. நகரங்களில் தான் நாம் அவற்றை கண்டுகொள்வதில்லை. சிலர் நாய்களை காவலுக்காக வளர்ப்பார்கள். சிலர் அந்தஸ்து அடையாளத்துக்காக வளர்ப்பார்கள்.


நாம் எந்த நோக்கத்தில் எதன் அடிப்படையில் இவற்றை வளர்த்தாலும் அவை நம்மிடம் எதிர்பார்ப்பதும் பகிர்வதும் அன்பு மட்டும் தான். இந்தக் கோழியைப் போல் நாமும் அன்பைப் பரப்புவோம். பெரிய, பெரிய காரியங்களை செய்ய முடியாவிட்டாலும் கூட, நமக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையாக அரவணைத்துச் செல்லலாம். கோழி நான் வேறு பறவை இனம், மயில் வேறு இனம் பார்க்கவில்லை. அன்பை மட்டுமே பாராட்டியது. அதுபோல் நாமும் மொழி, இனம், மதம், சாதி என அனைத்தையும் கடந்து அன்பை பரப்பலாம். அது நமக்கு மிகவும் எளிதானது.