இந்தோனோசியாவின் சுமத்ரா தீவில் வேட்டைக்காரர்கள் வைத்த வலையில் சிக்கி குட்டி யானை ஒன்று பாதி தும்பிக்கையை இழந்து பரிதவித்துவருகிறது.


யானைகள் என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் மிகப்பெரிய தோற்றமும், தும்பிக்கையும் தான். உணவு, நீர் அருந்துவது, சுவாசிப்பது போன்ற அனைத்திற்குமே யானைகளுக்குத் தும்பிக்கைத்தான் பேருதவியாக உள்ளது. இதனை இழந்தால் யானைகள் உயிர் வாழ்வது மிகவும் சிரமமாக இருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள தும்பிக்கையை இழந்தால் என்ன நடக்குமோ என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் சர்வ சாதாரணமாக எதுவுமே தெரியாத யானைகளைப் பணத்திற்காக வேட்டைக்காரர்கள் கொல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இப்படித்தான் யானைகளை பிடிப்பதற்காக வைத்த வலையில் குட்டி யானை ஒன்று சிக்கிக்கொண்டு தன்னுடை பாதி தும்பிக்கையை இழந்து பரிதவித்து வருகிறது. இந்தோனோசியாவில் நிகழ்ந்த இந்நிகழ்வு வன ஆர்வலர்கள் மட்டுமில்லாமல் புகைப்படத்தைப்பார்க்கும் அனைவரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.



கடந்த திங்கள் கிழமை இந்தோனோசியாவில் ஆச்சே பகுதியில் யானைகளை வேட்டையாடுவதற்கு, வேட்டைக்காரர்கள் வலையை வைத்துள்ளனர்.  அதில் எதிர்பாரதவிதமாக சிக்கிய குட்டியானை தப்பிச்செல்ல முயற்சிக்கும் போது தன்னுடைய பாதி தும்பிக்கையை இழந்துவிட்டதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் சமீப காலங்களாக அதிலும் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பொருளாதாரப்பிரச்சனைகளில் மக்கள் மிகவும் சிரமத்தைச் சந்தித்து வந்த நிலையில் தான், உயிரினங்களை வேட்டையாடி அதன் மூலம் வருமானத்தை ஈட்டும் பழக்கம் அதிகரித்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக விஷம், பொறி வைத்து உயிரினங்களைக் கொல்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கிழக்கு ஆச்சே மாவட்டத்தில் மட்டும் கடந்த 9 ஆண்டுகளில் 25 சுமத்ரா யானைகள் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர்.



இதுப்போன்று  பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் விலங்குகளை வேட்டையாடுவது வெளிப்படையாக நிகழ்வதாகவும், இதுக்குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம்  கிழக்கு ஆச்சே பகுதியில் உள்ள ஒரு பனைத்தோட்டத்தில் ஒரு யானை அதன் தலை இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் உயிரிழந்த விலங்கின் தந்தத்தை விற்றதும் கண்டறியப்பட்டது. இதில் ஒருவரை போலீசார் கைது செய்திருந்த நிலையில் மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த குற்றம் நிரூபணமாகும் சமயத்தில் யானைகளின் தந்தங்களை விற்ற நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 100 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படும் எனக்கூறப்பட்டுவருகிறது. மேலும் அழிந்துவரும் யானைகளின் இனங்களைக்காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.