சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து, மத்திய சுகாதார அமைச்சர் மண்சுக் மாண்டவியா மக்களவையில் உரையாற்றினார். அப்போது, கடந்த சில நாட்களில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை காண்கிறோம். சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதோடு, அங்கு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆனால், இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை காண முடிகிறது.


கொரோனா தொற்றை நிர்வகிப்பதில் சுகாதாரத் துறை மிகவும் முனைப்பாக உள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது. மாநில அரசுகளுக்கு இதுவரை , 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.








மாஸ்க் அணிய வலியுறுத்தல்:

 

உலகளவில் தொற்று பரவல் நிலைமையை கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கொரோனா தொற்றின் புதிய மாறுபாட்டை சரியான நேரத்தில் அடையாளம் காண மரபணு வரிசைமுறை சோதனையை  அதிகரிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

 

பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தை அடுத்து, மக்கள் மாஸ்க் அணிவதையும், சானிடைசர்களைப் பயன்படுத்துவதையும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளோம்.

 

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளிடையே ரேண்டம் முறையில்  RT-PCR முறையில் மாதிரிகளை சேகரிக்க தொடங்கியுள்ளோம். கொரோனா தொற்றுநோயை முறையாக கையாள அரசு உறுதிபூண்டுள்ளோம், அதற்கான  உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,  மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கமளித்துள்ளார்.

 

மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு:

 

இதனிடையே,  செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  "ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவுகிறது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி கொரோனா டெஸ்ட் எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். மக்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதம் கடந்திருக்கிறது. கொரோனா வைரஸ் 10 விதமாக உருமாற்றம் பெற்றுள்ளது.

 


கண்காணிப்பு தீவிரம்:


கொரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா ப்ளஸ், காமா, கப்பா, ஒமிக்ரான் என உருமாறிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட போதிலும் கூட தமிழகத்தில் உயிரிழப்பு இல்லாமலே இருந்து வந்தது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு 4 கோடி ரூபாய் செலவில் மரபணு பகுப்பாய்வு கூடம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் குறைவாகவே பரவுகிறது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.