கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடி கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
கொரோனா பாதிப்பு:
அறிவியல் உலகின் தொடர் முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது கட்டுப்பாட்டில் வரவழைக்கப்பட்டது. கொரோனா எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இருந்தபோதிலும், பல மாதங்களாக சீனாவில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதை தொடர்ந்து, பொருளாதார தாக்கத்தின் காரணமாகவும் மக்கள் போராட்டத்தின் விளைவாகவும் பூஜ்ய கொரோனா கட்டுப்பாடுகள் அங்கு திரும்பபெறப்பட்டது.
உலக நாடுகளில் பரவும் கொரோனா:
இதன் எதிரொலியாக, சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவை பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,242 பேர் இறந்துள்ளனர். 3 லட்சத்து 83 ஆயிரத்து 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் இடம் இல்லாததால் தரையில் படுக்க வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாதிப்பு விவரம்:
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, டிசம்பர் 19ஆம் தேதி வரை, உலகம் முழுவதும் கொரோனாவால் 6,645,812 பேர் இறந்துள்ளனர் (உலகளாவிய இறப்புகளின் எண்ணிக்கை). இது தவிர, 64 கோடியே 90 லட்சத்து 38 ஆயிரத்து 437 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகள்:
- அமெரிக்கா - 9 கோடியே 85 லட்சத்து 25 ஆயிரத்து 870 பேர் பாதிப்பு; இறப்பு: 10 லட்சத்து 77 ஆயிரத்து 129 பேர்
- இந்தியா - 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 087 பேர்; இறப்பு: 5 லட்சத்து 30 ஆயிரத்து 674 பேர்
- பிரான்ஸ் - 3 கோடியே 77 லட்சத்து 16 ஆயிரத்து 837 பேர்; இறப்பு: 1 லட்சத்து 56 ஆயிரத்து 731 பேர்
- ஜெர்மனி - 3 கோடியே 69 லட்சத்து 80 ஆயிரத்து 883 பேர்; இறப்பு: 1 லட்சத்து 59 ஆயிரத்து 884 பேர்
- பிரேசில் - 3 கோடியே 57 லட்சத்து 51 ஆயிரத்து 411 பேர்; இறப்பு: 6 லட்சத்து 91 ஆயிரத்து 449 பேர்
அடுத்த 90 நாள்களில், சீனாவில் 60 சதவிகிதத்தினரும் உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார். குறிப்பாக, லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவருக்கும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.