கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.


உயிருக்கு போராடும் பீலே:


பெருங்குடலில் அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் மேலும் மோசமடைந்துள்ளதாகவும் சிறுநீரகம் மற்றும் இதய பிரச்னை தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 82 வயதான பீலேவுக்கு பொது வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவருக்கு அதிக மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது என மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. 


உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான பீலே, கடந்த நவம்பர் 29ஆம் தேதி, பிரேசில் ஸா பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, அவர் உயிருக்கு போராடி வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், அதற்கு அவரின் மகள்கள் கெலி நாசிமெண்டோ மற்றும் ஃபிளவியா அரான்டெஸ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.


கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிறுத்தம்:


இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட விரிவான அறிக்கையில், பீலே தீவிர சிகிப்பை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பேசிய அவரின் மகள்கள், இந்த கிறிஸ்துமஸ்-க்கு தங்களின் தந்தை வீட்டில் இருக்க மாட்டார் என கூறினர். வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


கடந்த 2021ஆம் ஆண்டு, அவருக்கு பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. அதை தொடர்ந்து, அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பீலேவுக்கு சுவாச தொற்று இருப்பதை மருத்துவர்கள் சமீபத்தில் கண்டறிந்தனர்.


கால்பந்து ஜாம்பவான்:


கால்பந்தின் முடிசூடா மன்னன் பிரேசிலில் 1940-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி பிறந்தார் பீலே. கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்குபவர். கால்பந்தாட்டத்தை அமெரிக்க கண்டத்தில் பிரபலப்படுத்தியவர்.


உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் போட்டவர் பீலே. ஹாட்ரிக் எனப்படும்  தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.


ஹாட்ரிக் கோல்கள்:


அவர் மொத்தம் 92 ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார். மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஒரே கால்பந்தாட்ட வீரர். கால்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பீலே 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.


களம் முழுவதும் ஆட்டத்தை உணர்ந்து ஆடும் பாங்கு, சிறப்பாக பந்தை வலைக்குள் தள்ளும் முறை, லாவகமாக இரண்டு முதல் மூன்று தற்காப்பு வீரர்களை ஏமாற்றி முன்னேறும் திறன், தலையாலும், மார்பாலும், தொடையாலும் பந்தை கட்டுப்படுத்தி இலக்கு தவறாமல் பந்தை வலைக்குள் தள்ளும் தந்திரம் என இவரிடம் ஏகப்பட்ட திறமைகள் இருந்தன.