ஹாரி பாட்டர் திரைப்படத்தில் வரும் மந்திரப்பொருட்களை விற்பனை செய்யும் கடையை போலவே தற்போது நியூயார்க் நகரில் 'ஹாரிபாட்டர் நியூயார்க்' என்ற விற்பனை நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. அந்த படத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் மற்றும் இடங்களை இந்த கடை பிரதிபலிப்பதாக உள்ளது. ராட்சச பீனிக்ஸ் பறவை, பறக்கும் புத்தகங்கள், உணவு பண்டங்கள், டெலிபோன் பூத், படத்தை பிரதிபலிக்கும் ஆடைகள் என்று 50க்கும் மேற்பட்ட பொருட்கள் இந்த கடையில் இடம்பெற்றுள்ளது. மூன்று தளங்களை கொண்ட இந்த கடை சுமார் 21 சதுர அடி பரப்பளவில் செயல்படவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த கடையின் வேலைகள் முடிந்த நிலையில் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி கடை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது. 






பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜே.கே. ரோலிங்கின் நாவல்களை தழுவி எடுக்கப்பட்ட படமே ஹாரிபாட்டர். கடந்த 2001ம் ஆண்டு தொடங்கி 2011ம் ஆண்டு வரை நான்கு வெவ்வேறு இயக்குநர்களை கொண்டு 8 பாகங்களாக இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஹாரிபாட்டர் கதாபாத்திரத்தில் டேனியல் ஜேக்கப் ரெட்கிலிஃ என்ற நடிகர் சிறுவயது முதலே முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார். 






மேலும் எம்மா வாட்சன் என்ற நடிகை ஹெர்மாயினி என்ற கதாபாத்திரத்திலும் ரான் வின்சலே என்ற கதாபாத்திரத்தில் ரூபர்ட் என்ற நடிகரும் இந்த படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்கள். ஹாரிபாட்டர் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரிதும் பிரபலமான திரைப்பட தொகுப்பாக உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சில நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் பிரபலமான இந்த திரைப்படத்தின் பல முக்கிய விஷயங்கள் தற்போது இந்த கடையின் மூலம் உயிர்பெற்றுள்ளது. 




ஹாரிபாட்டர் பட ரசிகர்கள் இன்றி பலரும் இந்த கடையின் தோற்றத்தை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கடைக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த கடை குறித்தும் அதில் விற்பனையாகவிருக்கும் பல பொருட்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.