நியூசிலாந்தில் புத்தாண்டு:


உலக மக்கள் அனைவரும் 2023 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராக உள்ளனர். உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேரமுறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். அந்த வகையில்  உலகின் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்தது.  இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2023 புத்தாண்டு பிறந்தது.  


இதையடுத்து, நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் உள்ள மக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்து முழக்கங்களை எழுப்பி, நண்பர்களையும், உறவினர்களையும் கட்டியணைத்து  2023-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.  


பொதுமக்கள் உற்சாகம்:


ஆக்லாந்து, கிறிஸ்ட்சர்ச் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கேளிக்கை விடுதிகள், உணவகங்களில் புத்தாண்டைக் கொண்டாட சிறப்பு நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவரில் நடந்த வாணவேடிக்கை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதைதொடர்ந்து நடைபெற்ற லேசர் நிகழ்ச்சியும் கவனம் ஈர்த்தது.


புத்தாண்டை கொண்டாடும் முதல் நாடாக நியூசிலாந்து இருந்தாலும், டோங்கா, கிரிபாட்டி மற்றும் சமோவாட்டினி பசிபிக் தீவு நாடுக்ள் பகுதியில் தான் முதன்முறையாக, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளதால், மக்கள் புத்தாண்டை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதைதொடர்ந்து, ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்தியாவிற்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை கொண்டாட உள்ளன.


கடைசியாக புத்தாண்டு கொண்டாடும் பகுதி:


இதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் இந்தியாவிலும் 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்திய மக்களும் உற்சாகத்துடன் புத்தாண்டை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தாண்டின் கடைசி நாளான இன்று 2022 கொடுத்த அனுபவங்களை பகிர்ந்து நன்றி கூறியும்,  வருகிற 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும்  என்றும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் இறுதியாக, அமெரிக்காவிற்கு அருகில் உள்ள பொதுமக்கள் வசிக்காத தீவுகளான, பேக்கர் ஐ-லேண்ட் மற்றும் ஹவுலேண்ட் ஆகிய தீவுகளில் தான், இந்திய நேரப்படி நாளை மாலை 5.30 மணிக்கு 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது.