Hajj 2025 Rules: ஹஜ் பயணத்தில் இனி குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
ஹஜ் பயணம்:
இஸ்லாமியர்களின் மிக முக்கிய கடைமைகளில் ஒன்றாக கருதப்படுவது, வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். அதன்படி, உலகெங்கிலும் இருந்து, லட்சக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவிலும் இருந்தும் ஏராளமானோர் முன்பதிவு செய்து இறைவணக்கம் செய்கின்றனர். அதேநேரம், கடும் கூட்ட நெரிசல், அதிகப்படியான வெயிலின் தாக்கம் போன்ற காரணங்களால் ஹஜ் பயணத்தின் போது கூட ஏராளமானோர் உயிரிழந்து, சாலையோரங்களில் விழுந்து கிடந்த சம்பவங்களின் வீடியோ இணையத்தில் உள்ளன. கூட்டத்தில் பலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
ஹஜ் பயணத்திற்கான புதிய விதிகள்:
இந்நிலையில் தான் வருடாந்திர ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவிற்கு வரும் யாத்ரீகர்களுக்கான புதிய விதிகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின் போது குழந்தைகள் யாத்ரீகர்களுடன் செல்ல அனுமதி இல்லை என்று அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வளைகுடா செய்திகள் தெரிவிக்கின்றன. "குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், புனித யாத்திரையின் போது அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யாருக்கு முன்னுரிமை
2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான முன்னுரிமை, எப்போதும் போல, புனித யாத்திரை மேற்கொள்ளாதவர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஹஜ் பருவத்திற்கான பதிவு சவுதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நுசுக் தளம் வழியாக தொடங்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களைச் சரிபார்த்து, தங்கள் பயணத் தோழர்களைப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், உள்நாட்டு யாத்ரீகர்களுக்காக புதிய தவணை அடிப்படையிலான கட்டணத்தை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஹஜ் தொகுப்புக்கு மூன்று தவணைகளில் பணம் செலுத்தலாம்: முன்பதிவு செய்த 72 மணி நேரத்திற்குள் 20% வைப்புத்தொகை, அதைத் தொடர்ந்து ரமலான் 20 மற்றும் ஷவ்வால் 20 க்குள் 40% என்ற இரண்டு சமமான கொடுப்பனவுளை மேற்கொள்ளலாம்.
1.75 லட்சம் இந்தியர்களுக்கு அனுமதி
கடந்த மாதம், சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஜெட்டாவில் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், வரவிருக்கும் ஹஜ் பருவத்திற்காக இந்தியாவிலிருந்து 175,025 யாத்ரீகர்களின் ஒதுக்கீட்டை மத்திய அரசு பெற்றது. இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்புகளைப் பற்றி விவாதிக்க, போக்குவரத்து மற்றும் தளவாட சேவைகள் அமைச்சர் சலே பின் நாசர் அல்-ஜாசருடன் பல உயர்மட்ட சந்திப்புகளை ரிஜிஜு நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.