சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். தற்போது 35 வயதான இவர், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி முதல் அந்த நாட்டின் இளவரசராக பதவி வகித்து வருகிறார். இவர் பட்டத்து இளவரசராக சவுதியில் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் அந்த நாட்டில் பல்வேறு சீர்த்திருத்தங்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு வருகிறார். மேலும், அந்த நாட்டு பொருளாதார மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக இவர் பல்வேறு திட்டங்களையும், சீர்த்திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறார். இதற்காக விஷன் 2030 என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த வரிசையில், இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்கா மற்றும் மெதினாவில் பாதுகாப்பு பணியில் சவுதி அரேபியாவின் ராணுவத்தில் உள்ள பெண்களை ஈடுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.




மெக்காவில் தற்போது ஏராளமான இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இளவரசர் முகமது பின் சல்மானின் அறிவிப்பைத் தொடர்ந்து, மெக்காவில் மோனா என்ற ராணுவ வீராங்கனை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். மெக்கா புனிதத்தலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முதல் பெண்  என்ற பெருமையை மோனா படைத்துள்ளார். இதுதொடர்பாக, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மோனா தனது தந்தையின் பாதையில் பயணிப்பதாகவும், மிகவும் புனிதமான மெக்கா பெருமசூதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணி என்றும் கூறினார்.


சவுதி அரேபியாவில் பெண்கள் யாருடைய துணையும் இன்றி வெளியில் நடமாடுவது, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, கார் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கு பல ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இயல்பாகவே கடுமயைான கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த நாட்டில், பெண்களுக்கு பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. முகமது பின் சல்மான் அந்த நாட்டின் இளவரசராக முடி சூட்டிய பிறகு, பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பல்வேறு விவகாரங்களில் சீர்த்திருத்தத்தை செயல்படுத்தி வருகிறார்.




முகமது பின் சல்மான் இளவரசராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, அந்த நாட்டில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் உரிமை ஆகியவற்றை கொண்டு வந்தார். மேலும். சவுதி அரேபியாவில் மிகப்பெரிய சீர்த்திருத்தமாக ராணுவத்தில் பெண் படையினரையும் உருவாக்கினார். மேலும், மதினா, காபா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலும் பெண்கள் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.