கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது வரை உலகை முடக்கி உள்ள நிலையில் சீனா மட்டும் தொற்றி தாக்கத்தில் இருந்து விடுபட்டு வந்தது. இந்த நிலையில் சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஜெங்ஜோவில் 1000 அண்டுகளில் பெய்த கனமழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.


நேற்றைய தினம் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட வீடியோ மூலம், சீனாவில் பெய்த கனமழையால் நிலத்தடியில் அமைக்கப்பட்ட ரயில்நிலையத்தில் ரயிலின் உள் மழைநீர் புகுந்து மார்பளவு தண்ணீரில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிப்பட்டனர். இதனையறிந்த ஜெங்ஜோ நகர அதிகாரிகள் பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.


மழைநீரில் சிக்கிக் கொண்டது குறித்து உயிர் பிழைத்தவர் சமூகவலைதளங்களில் பதிவிட்ட கருத்தில், ‘’தண்ணீர் என் மார்பை அடைந்தபோது நான் மிகவும் பயந்தேன். ஆனால் திகிலூட்டும் விஷயம் என்னவென்றால் ரயிலில் இருந்த தண்ணீர் அல்ல; அங்கு குறைந்து வரும் காற்றின் அளவுதான்’’ என அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.


கனமழை காரணமாக, பெய்ஜிங்கில் இருந்து தென்மேற்கே 650 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பேருந்துபோக்குவரத்தானது நிறுத்தப்பட்டது. இந்த மழை தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்தை கவனிக்கும் அமைப்பு, உலகம் முழுவதும் காலநிலையில் ஏற்படும் தாக்கங்கள் வியக்கத்தக்கதாக உள்ளதாகவும், சீனாவின் ஜெங்ஜோ நகரில் ஒரே நாளில் செய்த மழையின் அளவு 8 மாத மழைக்கு சமாமாக உள்ளதாக ட்வீட் செய்துள்ளது.


தொடர் மழை காரணமாக கடந்த வாரம் வரை 16 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் மஞ்சள் ஆற்றின் கரையில் அகைந்துள்ள ஜெங்ஜோ, கோங்கி உள்ளிட்ட நகரங்களில் கனமழையால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் பரவலாக சரிந்து வருகின்றன. அடுத்த மூன்று நாட்களுக்கு ஹெனான் முழுவதும் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ள சீன ராணுவம் 3000க்கும் அதிகமான வீரர்களையும் மீட்பு பணியாளர்களையும் அப்பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளது.


ஜெங்ஜோவில் பதிவாகும் ஆண்டு சராசரி மழை அளவே 6.40 மில்லி மீட்டராக இருக்கும் நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய் கிழமை வரை ஜெங்ஜோவில் 617.1 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அமெரிக்காவிலும் கனடாவிலும் சமீபத்திய வெப்ப அலைகள் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ள பாதிப்பு போன்றே, சீனாவில் தற்போது பெய்துவரும் அதிகப்படியான மழைப்பொழிவும் உலக வெப்பமயமாதலுடன் தொடர்புடையது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



இதுபோன்ற தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் எதிர்க்காலத்தில் அடிக்கடி நிகழும் எனவும், இதுபோன்ற மாற்றங்களுக்கு ஏற்ப அரசாங்கங்கள் தங்களது உக்திகளை உருவாக்குவது அவசியம் என ஹாங்காங்க் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பத்துக்கோடி மக்கள் தொகை கொண்ட ஹெனான் முழுவதும் பல்வேறு ரயில்சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதுடன் விமானங்கள் அனைத்தும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.


வெள்ள பாதிப்புகள் குறித்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், வெள்ளத்தடுப்பு முயற்சிகள் மிகவும் கடினமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். அப்பகுதியில் உள்ள 12க்கும் அதிகமான அணைகள் எச்சரிக்கை அளவையும் தாண்டி நிரம்பி உள்ள நிலையில் யிஹெட்டன் அணை எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்ற அபாயம் நிலவுகிறது