ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பினர் தங்கள் தற்காலிக அரசை அமைத்திருப்பதோடு, தற்காலிக அமைச்சரவை பட்டியல், முக்கிய அரசு நிர்வாகங்களை நடத்துபவர்களின் பட்டியல் முதலானவற்றை வெளியிட்டுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் ஆளுநராக ஹாஜி முகமது இத்ரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியில் தனது மேசை மேல் ஒரு லேப்டாப்பும், துப்பாக்கி ஒன்றையும் வைத்து ஹாஜி முகமது இத்ரிஸ் அமர்ந்திருக்கும் புகைப்படம் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.


கடந்த ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய பின், தாலிபான்கள் தங்கள் தற்கால அரசை அமைத்தனர். மேலும், தங்கள் கொள்கைகளுக்கேற்ப புதிய விதிமுறைகளையும் அமல்படுத்தி வருகின்றனர். போரால் பாதிக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தானில் தற்போது இயல்பு நிலை படிப்படியாகத் திரும்பி வருகிறது. பஞ்ச்ஷீர் உள்ளிட்ட சில பகுதிகள் மட்டும் இன்னும் முழுமையாகத் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்காலிக தலைவர்களாகப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர்கள் குறித்த தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளாகி வருகின்றன. அவர்களுள் பலர் அமெரிக்கப் படைகளால் பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கியை நிர்வகிக்க அதன் தற்காலிக ஆளுநராக ஹாஜி முகமது இத்ரிஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தனது அலுவலகத்தின் மேசை மீது லேப்டாப், நவீன துப்பாக்கி ஆகியவற்றோடு அவர் அமர்ந்திருக்கும் படம் தற்போது வைரலாகி வருகிறது. 



ஆப்கான் மத்திய வங்கியில் தாலிபான்கள்


 


ஹாஜி முகமது இத்ரிஸ் ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்குத் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்டதை, தாலிபான்களால் வீழ்த்தப்பட்ட ஆப்கானிஸ்தான் அரசின் குடியரசுத் தலைவராகப் பொறுபேற்றிருக்கும் அம்ருல்லா சலெஹ் எதிர்த்துள்ளார். ``அல் காயிதா அமைப்பின் அனுதாபிகளுக்கும், தாலிபான்களுக்கும் இடையில் பணப் பரிமாற்றம் செய்துகொண்டிருந்த நபர் ஆப்கானிஸ்தான் மத்திய வங்கிக்கு கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது அவமானம்.. துரோகம்.. இதில் நான் பங்குபெறவில்லை” என்று கடுமையாகப் பேசியுள்ளார்.  


போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரம் கொண்ட ஆப்கானிஸ்தானைச் சரிசெய்யும் நோக்கத்தோடு ஹாஜி முகமது இத்ரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் போர்ச் சூழலால் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மேலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கின்றன. அரசு அலுவலகங்களும் செயல்படாமல் முடங்கியுள்ளன. அரசுப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளன. அரிசி, பெட்ரோல் முதலான பொருள்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இப்படியான சூழலில், மக்களைப் பாதிக்கும் பொருளாதார நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, நிறுவனங்களை நெறிபடுத்தும் பொறுப்பு ஹாஜி முகமது இத்ரிஸுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.



ஹாஜி இத்ரிஸ்


 


இத்ரிஸ் நியமனம் குறித்து பேசியுள்ள மூத்த தாலிபான் தலைவர் ஒருவர், கடந்த 2016ஆம் ஆண்டு ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட தாலிபான் நிதி பொறுப்பாளர் முல்லா அக்தர் மன்சூருடன் நீண்ட காலமாக இத்ரிஸ் பணியாற்றியதாகவும், கல்வி கற்காத போதும், தாலிபான் அமைப்பின் நிதி பரிவர்த்தனை குறித்த ஆழ்ந்த அறிவுள்ளவராக இத்ரிஸ் பணியாற்றியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். 


``வெளி உலகத்திற்கு தெரியாத பலர் எங்களுடன் இருந்து பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர். ஹாஜி இத்ரிஸ் அப்படிப்பட்டவர். அவர் மதம் குறித்து கூட கற்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் நிதி விவகாரத்தில் தேர்ந்தவர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.