டிஎன்ஏ மரபணு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட நெப்போலியன் தொப்பி ஒன்று ஹாங்காங்கில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் முன்னோட்ட காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது.
மாவீரன் நெப்போலியனின் மரபணுவைக் கொண்டுள்ள முதல் தொப்பி வரும் அக்டோபர் 2ம் தேதி லண்டனில் நடைபெறும் ஏலப்போட்டியில் காட்சிப்படுத்தப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர்க்களங்களில் இரண்டு பக்கங்கள் கூரான பைகோர்ன்ஸ் (bicornes) வகையான தொப்பியை அணிந்தவாறு தான் நெப்போலியன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். மேலும், நெப்போலியன் பொனபாத் காலத்தில் பயன்படுத்திய தொப்பிகள் ஏலங்களில் கிடைக்கின்றன. ஆனால், இந்த தொப்பிகள் பெரும்பாலும் அரச குடும்பத்தில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்தியதாகவும், போர் வீர்ரகள் பயன்படுத்தியதாகவும் இருந்திருக்கின்றன.
முன்னதாக, நெப்போலியன் பொனபாத் பயன்படுத்திய தொப்பி என்று தெரியாமல் ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற சிறிய ஏலத்தில் இந்த தொப்பியை உரிமையாளர் ஒருவர் வாங்கியுள்ளார். இதனையடுத்து, தொப்பியில் இருந்த செதுக்கப்பட்ட சொற்கள், பேரரசிற்கு சொந்தமான சில குணாதிசயங்கள் இருந்ததை கண்டறிந்தவுடன் ஆர்வம் கொள்ள ஆரம்பித்தார். இது, வரலாற்றில் முற்றிலும் எதிர்பாராத நிகழ்வாகும் என போன்ஹாம்ஸ் ஐரோப்பாவின் நிர்வாக இயக்குனர் சைமன் காட்டில் தெரிவித்தார்.
தொப்பி பின்னர் எலக்ட்ரான் நுண்ணோக்கி உட்பட பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி விரிவாக சோதிக்கப்பட்டு, நெப்போலியனின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நெப்போலியன் பயன்படுத்திய தொப்பி என்பதால், 100,000 பவுண்டுகள் ($ 138,550) முதல் 150,000 பவுண்டுகள் வரை சந்தையில் ஏலம் விடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை, ஏலம் எடுக்கப்பட்ட நெப்போலியன் தொப்பிகளில் அதிகபட்ச விலை $ 2.5 மில்லியன் டாலராக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெப்போலியன்:
கோர்சிக்காவில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான். 1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான். தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான்.
நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. இருப்பினும், பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பது பின்னாளில் தான் உறுதி செய்யப்பட்டது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது