தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் திருமணத்தின்போது மணமகனை போலீசார் கைது செய்த நிலையில், விட்டுவிடுங்கள் என மணமகள் கதறி அழுத வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.


திருமணம் என்றாலே சொர்க்கத்தில் நிச்சயமாகிறது என்பார்கள். அந்நாள் விசேசமானது மட்டுமில்லாமல், மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் வாழ்க்கையின் புதிய அத்தியாதத்திற்கான தொடக்கம் என்றே கூறலாம். அந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்நாளில் போலீஸ் மணமகனை கைது செய்தால் என்ன நடக்கும்? இதுவரை சினிமாக்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதைப் பார்த்திருப்போம். அதுவே நம் கண்முன்னே நடந்தால் எப்படி ரியாக்ட் செய்வோம் என்பதை சற்று யோசித்துக்கூட பார்க்க முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம்தான் தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நிகழ்ந்துள்ளது.



திருமணத்திற்காக மிகவும் மகிழ்ச்சியுடன் மணமகன் மற்றும் மணமகள் காத்திருந்த நிலையில் திடீரென அங்கு வந்த போலீசார், புதுமாப்பிள்ளையை அங்கிருந்து கைது செய்து அழைத்து செய்தனர். என்ன நடந்தது என தெரியாமல் திகைத்திருந்த நிலையில், அவரை விடுவிக்க புதுமணப்பெண் முயற்சித்தார். ஆனால் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. பின்னர் காரின் பின்னாலே கணவனை விட்டு விடும் படி கேட்டுக்கொண்டே ஓடியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.



இந்த வீடியோவைப்பார்த்த நெட்டிசன்கள், ஐய்யோ இதுபோன்று ஒருவருக்கும் நடக்க கூடாது, அந்தப்பெண் என்ன செய்யப்போகிறார் என்று பலரும் கருத்துக்களைப்பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் தான், ஈக்வடாரில் தெற்கு மகாணத்திலிருந்து அறிவிக்கப்பட்ட அறிக்கையில், திருமண நிகழ்வின்போது கைதாகியுள்ள மணமகன் ஏற்கனவே மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில் அப்பெண்ணுக்கு ஜீனாம்சம் எதுவும் கொடுக்கவில்லை.


இதனையடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண் கொடுத்த புகாரினையடுத்துதான் எக்வடார் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை அறிந்த நெட்டிசன்கள், பல்வேறு வேடிக்கையான பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர். மேலும் இவர் கைது செய்யப்பட வேண்டியவர்தான் எனவும் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.