Greece Boat Accident : லிபியாவில் இருந்து கிரீஸ் நோக்கி வந்து கொண்டிருந்த படகு கவிழ்ந்து சுமார் 300 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


படகு கவிழ்ந்து விபத்து


மிக மோசமான பொருளாதாரம், உள்நாட்டு போர் என பல்வேறு காரணங்களால் சொந்த நாட்டில் இருந்து பல ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.  ஆபத்தான வகையில் பயணம் செய்து தான் சொந்த நாடுகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். அப்போது சில மோசமான விபத்துகளும் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு கூட  நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி கிழக்கு லிபியாவில் இருந்து கிரீஸ் நோக்கி புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற  படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபந்து கிரீஸின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 76 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 15ஆம் தேதி அதிகாலை நடந்துள்ளது. முதலில் இந்த விபத்தில் சுமார் 79 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் 104 பேர் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டிருந்தனர்.


காரணம்


இதனை அடுத்து, விபத்துக்குள்ளான படகில் சுமார் 750 பேர் பயணித்துள்ளனர். அதில் 400 பாகிஸ்தானியர்கள், எகிப்தியர்கள் மற்றும் 150 சிரியர்கள் இருந்தனர். இந்நிலையில், தற்போது 300 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே 79 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 300 பேராக உயிரிழப்பு உயர்ந்துள்ளது. மேலும், 104 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதகாவும், எகிப்தைச் சேர்ந்த 43 பேர் உயிர் தப்பியதாகவும் ஆப்பிரிக்க நாட்டின் தூதரகம் தெரிவித்துள்ளது.


மேலும், விபத்துக்குள்ளான சிறிய படகில் அதிகப்படியான நபர்களை ஏற்றிச் சென்றுள்ளனர். இதனால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்து தொடர்பாக ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 10 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.


விசாரணைக்கு உத்தரவு


இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், ”கிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பாகிஸ்தானியர்கள் 300 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். 






காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைச் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். உரிய விசாரணைக்கு பிறகு உண்மை கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.