அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா பயணம் மேற்கொள்கிரார். பிரதமர் மோடி ஜூன் 24 ஆம் தேதி  வரை அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் நியூயார்க்கில் தொடங்குகிறது, அங்கு ஜூன் 21 ஆம் தேதி  ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை தலைமை தாங்கி கலந்துக் கொள்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அமெரிக்கா முழுவதும் நியூயார்க் உள்பட 20 பெரிய நகரங்களில் இந்திய-அமெரிக்கர்கள் ஒன்று திரண்டு, அவரை வரவேற்கும் வகையில் ஒற்றுமை பேரணியை நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான மக்கள் இப்பேரணியில் கலந்துக்கொண்டனர். 


பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் ஜூன் 22 ஆம் தேதி வாஷிங்டன் டிசிக்கு செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடனும் பிரதமர் மோடியை வரவேற்பார்கள். பின்னர் இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி ஜூன் 22 பிற்பகல் காங்கிரஸ் தலைவர்களின் அழைப்பின் பேரில் காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி மற்றும் செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர் உட்பட பலரும் இதில் பங்கேற்கின்றனர்.  இஸ்ரேல் நாட்டை தவிர இரண்டு முறை உரையாற்றிய மூன்றாவது உலகத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.  2016 ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றினார்.


அதனை தொடர்ந்து  பிடனும் முதல் பெண்மணி ஜில் பிடனும் ஜூன் 22 அன்று மாலை பிரதமர் மோடிக்கு அரசு விருந்து அளிக்கிறார்கள்.  பல நூறு விருந்தினர்கள், காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரவு விருந்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஜூன் 23 அன்று, பிரதமருக்கு துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் மற்றும் மாநிலச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் இணைந்து மதிய விருந்து வழங்குவார்கள். பின் தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடனும் பிரதமர் மோடி உரையாற்றுவார்.  ஜூன் 23 மாலை ரொனால்ட் ரீகன் மையத்தில் நடைபெறும் மெகா நிகழ்வில் அவர் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி எகிப்து சென்று அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியை சந்தித்து இரு தரப்புக்கும் இடையே வர்த்தகம் மற்றும் மூலோபாய உறவுகளை மேம்படுத்துகிறார்.  பிரதமர் மோடியின் முதல் எகிப்து பயணம் இதுவாகும்.