உக்ரைனில் 79 வயதான பாட்டி ஒருவர் ஏகே 47 ராக துப்பாக்கி கொண்டு பகிர்ச்சி செய்து வரும் புகைப்படம் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும், உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறல் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கணிக்கப்படுகிறது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதி வருகின்றன. நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 






இந்த நிலையில் தான், வாலண்டினா கான்ஸ்டான்டினோவ்ஸ்கா என்ற உக்ரேனை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சிவிலியன் போர் பயிற்சியில் பங்கேற்ற பிறகு ஏகே 47 துப்பாக்கியை வைத்து போஸ் கொடுத்துள்ளார். தெற்கு உக்ரைனின், மரியுபோல் நகரத்தை சேர்ந்த 79 வயது மூதட்டியான இவர் ஏகே 47 துப்பாக்கியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லித்தருகிறார். உள்ளூர் ஊடகங்களிடம் அவர் பேசியதாவது, "ஏதாவது நடந்தால் நான் சுடத் தயாராக இருக்கிறேன். நான் என் வீடு, என் நகரம், என் குழந்தைகளைப் பாதுகாப்பேன். நான் இதைச் செய்வேன், ஏனென்றால் நான் என் நாட்டை இழக்க விரும்பவில்லை. இது என் நகரம்." என்று வீரம் தெரிக்க பேசுகிறார். அவரை பல சமூக ஊடக பயனர்கள் ஹீரோ என்று புகழ்ந்து வருகின்றனர். மேலும் அவர் பேசுகையில், உங்களுடைய அம்மாவாலும் இதனை செய்யமுடியும், அந்த துப்பாக்கியை தூக்கும் தெம்பு அவருக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் இதனை இயக்குவதற்கான ஆற்றல் எல்லோரிடமும் உள்ளது, அதற்காவது எல்லோரும் கரம் கோர்க்க வேண்டும் என்றார்.






இந்த பயிற்சியின் நோக்கமானது பொதுமக்கள் மூலம் உருவாக்கப்படும் இந்த படையில் இருப்பவர்களுக்கு ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான அடிப்படைகளை கற்றுத்தருவதகும். ஏனெனில் எல்லையில் முகாமிட்டு இருக்கும் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற நிலை இருப்பதால் அந்நாட்டு அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 8 வருடங்களில் இதுவே முதன்முறையாக பொதுமக்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் செயலாகும். அமெரிக்கா- ரஷ்யா என இருநாடுகளின் படைகளும் உக்ரைனுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்குமா என்ற கேள்வி இன்று உலகப் பிரச்னையாக மாறியிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும் ரஷ்யாவைக் கடுமையாக எச்சரித்து வருகின்றன. உக்ரைன் தலைநகரில் இருந்த தன் தூதரகத்தையும் மூடியது. ஆனால், ரஷ்யா இதை ஜாலியாகக் கிண்டல் செய்துவிட்டு, எல்லையிலிருந்து கொஞ்சம் படைகளை விலக்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. எனினும், நேற்று ஜோ பைடனே, "ரஷ்யா பின்வாங்காது. புதின் நிச்சயம் உக்ரைனைத் தாக்குவார்" என்று தெரிவித்திருக்கிறார். இதனால் போர்ப் பதற்றம் இன்னும் தணியவில்லை என்பதே உண்மை. அதற்காகவே உக்ரைன் பெரும் தயாரிப்புகளுடன் காத்திருக்கிறது.