மலை ஏறும்போட்டியின்போது ஈரானிய தடகள வீராங்கனை ரெகாபி ஹிஜாப் அணியாததால் அவரது வீட்டை ஈரானிய காவல்துறை அதிகாரிகள் இடித்ததாக தகவல் பரவி வருகிறது.


இஸ்லாமிய மதத்தை மிக தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் ஒன்று ஈரான். இங்கு 9 வயது பெண்கள் முதல் அனைத்து பெண்களும் இஸ்லாமிய மத அடிப்படைப்படி ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதன்படி,  1979 நாட்டில் ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர் பெண்கள் அனைவரும் வெளியே செல்லும்போது தலை முதல் கழுத்துவரை மூடி இருக்க வேண்டும். அப்படி அணியவில்லை எனில் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டும் வந்தது. 


அதேபோல், ஈரானிய விளையாட்டு வீராங்கனைகள் தங்கள் தலைமுடியை மறைத்தவாறு, தலையில் முக்காடு அணிந்துதான் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 


இந்த சூழலில், தென் கொரியாவில் சர்வதேச மலை ஏறும் போட்டி சமீபத்தில் நடந்தது. இந்த போட்டியில் ஈரானிய மலையேற்ற வீராங்கனையான 33 வயதான எல்னாஸ் ரெகாபி கலந்து கொண்டார். ரெகாபி போட்டியின்போது ஹிஜாப் இல்லாமல் கலந்துகொண்டாக கூறப்படுகிறது. இதையடுத்து, சர்வதேச போட்டியில் ஈரானின் கட்டாய ஆடை கட்டுப்பாட்டை ரெகாபி மீறியதாக அவர் மீது சர்ச்சை எழுந்தது. 


இதையடுத்து உடனடியாக விளக்கமளித்த ரெகாபி, “நான் போட்டியில் பங்கேற்றபோது எதிர்பாராத விதமாக எனது ஹிஜாப் கீழே விழுந்துவிட்டது. இதற்கு எனது மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார். இருப்பினும், ரெகாபியை அந்நாட்டு அரசு கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. 


சர்வதேச மலை ஏறும் போட்டி முடிந்தபின் எல்னாஸ் ரெகாபி, தனது தாய்நாடான ஈரான் திரும்பினார், அப்போது அவர் தலையில் ஹிஜாப் அணியாமல், கருப்புநிற பேஸ்பால் தொப்பியால் மறைந்திருந்தார். அப்போதும், விமான நிலையத்தில் மலை ஏறும் வீராங்கனை எல்னாஸ் ரெகாபிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


இந்தநிலையில், மலை ஏறும்போட்டியின்போது ஈரானிய தடகள வீராங்கனை ரெகாபி ஹிஜாப் அணியாததால் அவரது வீட்டை ஈரானிய காவல்துறை அதிகாரிகள் இடித்ததாக தகவல் பரவி வருகிறது. இதையடுத்து, இதுகுறித்து பேசிய உள்ளூர் ஊடங்கள், ‘உரிய அனுமதி இல்லாமல் வீடு கட்டப்பட்டதால்தான் அவரது வீடு இடிக்கப்பட்டது. இந்த வீடு இடிக்கப்பட்ட சம்பவத்திற்கும், ஹிஜாப் அணியாததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பல மாதங்களுக்கு முன்பே நடந்த சம்பவம்’ என்று தெரிவித்துள்ளது.






இதற்கிடையில், மலை ஏறும் வீராங்கனை எல்னாஸ் ரெகாபி மற்றும் அவரது சகோதரரும், தடகள வீரருமான தாவூத் ஆகியோர் வீடு இடிக்கும்போது கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...


குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த 22 வயதான மாஷா அமினியை ஹிஜாப்பை சரியாக அணியவில்லை எனக் கூறி அவரை கைது செய்து அறநெறி காவல்துறையினர் கொடூரமாக தாக்கி வாகனத்தில் ஏற்றினர்.


காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று சோதனை மேற்கொண்டதில் மருத்துவர்கள் மாஷா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் மாஷா உயிரிழந்தார்.


இதையடுத்து, உயிரிழந்த மாஷா அமினியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு கடந்த இரண்டு மாத காலமாக வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இரண்டு மாத போராட்டத்திற்கு பிறகு உடை கட்டுப்பாட்டு விதியை கண்காணிக்கும் அறநெறி காவல்துறையை ஈரான் அரசு கலைத்தது.


இதுகுறித்து அரசின் தலைமை வழக்கறிஞர் முகமது ஜாபர் மொண்டசெரி கூறுகையில், "அறநெறிக் காவல் துறைக்கும் நீதித்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, அறநெறிக் காவல்துறை கலைக்கப்பட்டது" என்றார்.