புதிய அதிபரை தேர்வு செய்யும் நிலை:
இலங்கையில் அதிபர் கோத்தபாய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அங்கு தற்போது புதிய அதிபர், பிரதமர் ஆகியோரை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாமல் தத்தளித்த மக்கள், வீதிகளில் இறங்கி, அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தனர். போராட்டம் புரட்சியாக வெடித்ததால் அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். பொதுமக்கள் அதிபரின் மாளிகை, அதிபர் இல்லம் ,பிரதமர் செயலகம் பிரதமரின் இல்லம், என அனைத்தையும் கைப்பற்றி தம் வசம் வைத்திருந்தனர்.
அரசியல் கட்சிகளிடையே பலமுனை போட்டி:
அதன் பின்னரே தற்போது இலங்கையின் அரசியலில் மாற்றம் செய்வதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் முன் வந்திருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதிபர் பதவி, பிரதமர் பதவியை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே பலமுனை போட்டி நிலவுகிறது. மக்கள் படும் கஷ்டங்கள், துயரங்களை பாராமல் பதவிக்காக அடித்துக் கொள்ளும் நிலைமை, இன்னும் அங்கு முடிவடையவில்லை. பெரும்பான்மை சிங்கள கட்சிகள் தங்களிடையே மோதிக் கொள்ளும் நிலைமை தற்போது அங்கே ஏற்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அதிக அளவு அமைச்சர்களை கொண்டிருக்கும் கோத்தபய ராஜபக்சவின் கட்சியினர், மக்கள் விடுதலை முன்னணி ,ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி என பெரும்பாலான சிங்கள கட்சிகள் தத்தமது வேட்பாளர்களை முன்னிறுத்த திட்டமிட்டு வருகிறது.
தேர்தலை கோரும் மக்கள்:
யாரும் மக்களின் பிரச்சினைகளை பார்க்கவில்லை, தமது கட்சி ,தமது குடும்பம், என்ற ஒரு நோக்கிலேயே செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பதவி ஆசை இன்னும் போகவில்லை என்பது அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது தெளிவாக புரிகிறது. ஆனாலும் இலங்கை மக்கள் கேட்டுக் கொண்டிருப்பது அரசியலமைப்பின் படி ஒரு தேர்தலையே.
ராஜபக்சவினரின் ஆட்சியை வேண்டாம் என மக்கள் தூக்கி எறிந்தார்கள். ஆனாலும் மீண்டும் அந்த கட்சியை சார்ந்த அமைச்சர்களும், உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் அதிக அளவில் இருக்கும் போது, எவ்வாறு மக்கள் கேட்கும் நியாயமான புது அரசு உருவாக்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே ஒரு நிரந்தரமான பொருளாதார தீர்வு, அரசியல் தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐ.நா கூறுவது என்ன?:
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின்படி அதிகார மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அது அமைதியான முறையில் நடைபெற வேண்டும் எனவும் ஐநா தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. மக்களிடையே நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாலும் ,பொருட்களின் விலை பன் மடங்கு அதிகரித்ததாலும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி பல மாதக்கணக்காக போராடி, அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டு இருப்பதாக ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மக்கள் எதிர்பார்ப்பு:
இலங்கையை நான்காக கூறு போட்டு பிரிப்பதற்கு முனைந்த சில நாடுகள் தற்போது ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது தான் புரியவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தவிர்த்து விட்டு ,உலக நாடுகள் தற்போதாவது முன்வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும் அரசியலமைப்பு முறைப்படி தேர்தலை நடத்தி அதிபர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.