Google Israel Protest: இஸ்ரேல் அரசு உடனான கூகுள் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை எதிர்த்து, அந்நிறுவன ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 பேரை பணியில் இருந்து நீக்கிய கூகுள்:
இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு, ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. தங்களது கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக, அமெரிக்காவில் உள்ள அந்நிறுவன அலுவகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் 9 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது 28 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புராஜக்ட் நிம்புஸ் என்றால் என்ன?
கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் சேர்ந்து, இஸ்ரேல் அரசாங்கத்திற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் சேவை வழங்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நிம்புஸ் என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 10 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த திட்டம் மூலம் செயற்கை நுண்ணறிவு மூலம் முகங்களை அடையாளம் காணுதல், தானாக புகைப்படங்களை வகைப்படுத்துதல், இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் ராணுவத்திற்கான டிராக்கிங் பணிகளை செய்ய முடியும். ஆனால், காஸாவில் இனப்படுகொலை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு, இதுபோன்ற தொழில்நுட்ப உதவிகளை வழங்கக் கூடாது என கூறி கூகுள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் தான் 28 பேரை பணிநீக்கம் செய்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் சொல்வது என்ன?
இதுதொடர்பாக நிறுவன ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் வழங்கியுள்ள சுற்றறிக்கையில், “போராட்டம் போன்ற நடத்தைகளுக்கு எங்கள் பணியிடத்தில் இடமில்லை மற்றும் பொறுத்துக்கொள்ளப்படாது. எங்கள் ஊழியர்களில் பெரும்பாலோர் சரியானதைச் செய்கிறார்கள். எங்கள் கொள்கைகளை மீறும் நடத்தையை நாங்கள் புறக்கணிக்கப் போகிறோம் என்று நினைக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவராக இருந்தால், மீண்டும் சிந்தித்துக் கொள்ளுங்கள். நிறுவனம் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.
மேலும் சீர்குலைக்கும் நடத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, பணியில் இருந்து நீக்குதல் போன்ற எங்கள் நீண்டகால கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம். விசாரணையின் அடிப்படையில் 28 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போராட்டக் குழுவினர் சொல்வது என்ன?
கூகுளின் பணிநீக்க நடவடிக்கை அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், “ விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க கூகுள் ஊழியர்களுக்கு உரிமை உண்டு எனவும் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, கூகுள் அதன் நிதி மற்றும் ரியல் எஸ்டேட் குழுக்களில் இருந்து பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மிகவும் திறமையாகவும் சிறப்பாகவும் செயல்பட சில மாற்றங்களைச் செய்துள்ளதாகவும், தேவையற்ற அடுக்குகளை அகற்றி, அவற்றின் மிகப்பெரிய தயாரிப்பு முன்னுரிமைகளுக்கு தங்கள் வளங்களை முதலீடு செய்வதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.