ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 2வது நாளாக விமானம் ரத்து செய்யப்பட்டத்தை தொடர்ந்து பயணிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.


ஐக்கிய அரபு நாடுகளில் கனமழையால் சென்னையில் இருந்து துபாய், குவைத், சார்ஜா செல்லும் விமானங்கள் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து செல்லும் 12 விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, குவைத் போன்ற நாடுகளில் நேற்று முன் தினத்தில் இருந்து கனமழை பெய்து மோசமான வானிலை நிலவி வருகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் செல்லும் விமானங்களும், அந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. 






2வது நாளாக துபாயில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானம் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இரவு 10 மணிக்கு துபாய் செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இது குறித்து பயணிகளுக்கு உரிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுண்டரில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஆனால் அதிகாரிகள் கவுண்டரை மூடி விட்டு சென்றனர். 


நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து துபாய்க்கு வாரத்திற்கு 72 விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது. நேற்று, டெல்லி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ”இரண்டு நாட்களிலும் அதன் மூன்று - நான்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் விமானங்கள் தாமதமாகிவிட்டதாகவும், ஏழு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுள்ளது “ என தெரிவித்தார். 


பயணிகள் வருத்தம்: 


புதுச்சேரியில் இருந்து வந்த அபிலயன் இதுகுறித்து கூறுகையில், ”துபாய் செல்ல வேண்டிய விமானம் மழையால் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். அதிகாரிகள் உரிய முறையில் பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்துகின்றனர். எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என கூறினார். 


தஞ்சாவூரை சேர்ந்த மலர்கொடி இதுகுறித்து கூறுகையில், ”மகன் குடும்பத்தினர் துபாயில் வசிக்கின்றனர். விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். விமான கட்டணத்தை திரும்பி தர வேண்டும். அல்லது மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்” என்றார்.


அதேபோல், நேற்று துபாயில் இருந்து 13 விமானங்களை ரத்து செய்ய உள்ளதாக இண்டிகோ தெரிவித்தது.


இரண்டு நாள்களாக தொடரும் கனமழை: 


ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 16ம் தேதி பெய்ய தொடங்கிய கனமழை, இன்று வரை நிற்கவில்லை. இதன் காரணமாக அங்குள்ள விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், மால்கள், சாலைகள், வணிக நிறுவனங்களில் வெள்ள நீர் புகுந்தது. மேலும், பள்ளிகளில் புகுந்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் புகுந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 160 மி.மீ மழை பெய்துள்ளது.