ஊர் பேர் தெரியாத பகுதியில் இருப்பவர்களுக்கு வழிகாட்டுவதில் மட்டுமல்ல, அலுவலகத்தில் போர் அடித்து டைம்பாஸ் செய்ய எதேனும் தேடுபவர்களுக்கும் கூகுள் மேப்ஸ் சிறந்த ஆபத்துதவி. அப்படி அலுவலகத்தில் அமர்ந்து கூகுள் மேப்ஸ் ஆராய்ந்து கொண்டிருந்தவருக்கு சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைத்துள்ளது.அதுதான் தற்போது ரெட்டிட் தளத்தில் வைரலாகி வருகிறது. 


ஆபிஸில் என்ன செய்வது எனத் தெரியாமல் கூகுள் மேப்ஸ் வழியாக சீனப் பெருஞ்சுவரை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவருக்கு ஒரு ஆச்சரியம்!சுவாரசியம்! கண்ணில் தென்பட்டுள்ளது. ஏரியல் வீயூவில் பார்த்தாலே தெரியும் அந்த சொற்கள் கற்களில் பொறிக்கப்பட்டு புதர்கள் நடுவே மறைந்திருந்தன. 


உடனே அதைப் புகைப்படம் எடுத்து ரெட்டிட்டில் பகிர்ந்து என்ன என்று விளக்கம் கேட்டவருக்கு ஆச்சரிய பதில்கள் காத்திருந்தன, சீன மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த சொற்கள், “நாங்கள் மாவோவின் விசுவாசிகள்” எனக் கூறப்பட்டிருந்தது. மாவோ செதுங் சீனக் குடியரசின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்.






மேலும் இதைப் பகிர்ந்தவர் இதற்கான கூகுள் மேப் எண்ணையும் அதில் பகிர்ந்திருந்தார். ஆனால் இந்த படத்தின் கீழான விவாதத்தில் இதே போன்ற ஒரு புகைப்படம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பகிரப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. 2014ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இணையர் மிஷல் ஒபாமா தனது மகள்களுடன் சீனப் பெருஞ்சுவரைச் சுற்றிப் பார்த்தபோதே இதே படம் வைரலாகியுள்ளது. ஆனால் அந்த சமயம் புகைப்படக்காரர்கள் யாரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. இல்லையெனில் அப்போதே இந்தப் படம் வைரலாகி இருந்திருக்கும் எனக் கூறினார்கள். மேலும் இந்த எழுத்து 40 வருடப் பழமையானது என்றும் 2008 ஒலிம்பிக்ஸ் முன்பே அதனை சரிசெய்யுமாறு அரசு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.