ரஷ்யா-உக்ரைன் நாடுகள் இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷ்ய படைகள் வடக்கு உக்ரைன் பகுதிகளில் இருந்த நகரங்களை ஆக்கிரமித்தனர். குறிப்பாக கியூவ் நகரத்தை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்து இருந்தது. அந்த இடங்களிலிருந்து தற்போது ரஷ்ய படைகள் வெளியேறி இருந்தாலும் அவர்கள் ஏற்படுத்திய சேதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் படைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்தப் போது சில பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் படி உக்ரைனின் புச்சா என்ற பகுதியில் ஒரு அடித்தளத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ரஷ்ய படையினர் சிறை பிடித்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. அவர்கள் அங்கு 25 நாட்களுக்கும் மேலாக இருந்ததாக தெரிகிறது.
அந்த 20க்கும் மேற்பட்ட பெண்களில் தற்போது 9 பேர் கருவுற்றுள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பான உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் டெனிசோவா இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இவை தவிர ரஷ்ய படைகள் ஆக்கிரமிப்பின் போது பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்றுள்ளதாகவும் டெனிசோவா தெரிவித்துள்ளார்.
இந்த குற்றங்கள் அனைத்தும் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முறையாக விசாரிக்கப்படும் என்று ஐநா மனித உரிமை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் ஐநாவிற்கான துணை தூதர், “ரஷ்ய படைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை. இது ரஷ்ய படைகளை இப்படி சித்தரிக்கும் முயற்சிகளில் ஒன்று” எனக் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கெனவே ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து தற்காலிகமாக ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்