காலநிலை மாற்றத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை ஆதரிப்பதற்காக 1.2 பில்லியன் யூரோக்கள் அதாவது ரூ.10,025 கோடிகள் இந்தியாவிற்கு தருவாதற்கான உறுதிமொழிகளில் கையெழுத்திட்டு ஜெர்மனி கடந்த புதன்கிழமை அறிவித்தது. ஜெர்மனி வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதும், நாட்டின் தற்போதைய ஆற்றல் மாற்றத்திற்கு உதவுவதும் இந்தியாவிற்கான நிதி உறுதிப்பாட்டின் மையமாக இருக்கும்.


"இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு ஐந்தாவது நபரும் இந்தியர்கள் என்பது புள்ளிவிவரங்கள் குறிப்பிடுவது. இந்தியர்கள் இல்லாமல் நீங்கள் எந்த பெரிய உலகப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்பது நிதர்சனம், மேலும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று பருவநிலை மாற்றம். இந்தியாவுடன் இணைந்து செயல்படவும், காலநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இதுபோன்ற திட்டங்களுக்கு உதவவும் நாங்கள் முயற்சி செய்கிறோம், இது கிளாஸ்கோவில் நடந்த COP26 இல் நாங்கள் உறுதியளித்த எங்கள் சொந்த இலக்குகளை நோக்கி செயல்பட உதவுகிறது,” என்று ஜெர்மன் தூதர் வால்டர் லிண்ட்னர் கூறினார்.



இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய இரண்டும் காலநிலை மாற்றத்தால் அதிக தீவிர நிகழ்வுகளை சந்திக்கும் என்று கண்டறிந்துள்ளது. இரு நாடுகளும் சேர்ந்து உலகளாவிய கிரீன்ஹவுஸ் வாயுவில் கிட்டத்தட்ட 9 சதவீதத்தைக் கொண்டுள்ளன.


“COP26 இல், இந்தியாவும் ஜெர்மனியும் தடையற்ற நிலக்கரி சக்தியைக் குறைக்க ஒப்புக்கொண்டன. ஜெர்மனி 2038 க்குள் நிலக்கரியை விட்டு முழுமையாக வெளியேறும் என்று கூறப்பட்டாலும், அதற்கு முன்பாகவே அதனை அடைய நிறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காலநிலை முதலீட்டு நிதியங்கள் மற்றும் ஜெர்மனியால் ஆதரிக்கப்படும் பலதரப்பு நிலக்கரி மாற்றம் போன்ற திட்டத்தில் இந்தியா தற்போது இணைந்துள்ளது.



மிகவும் உறுதியாக, 2027 க்குள் மூட வேண்டியதாக 50 ஜிகாவாட் நிலக்கரி ஆலைகளை இந்தியா ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது,” என்று ஜெர்மன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் (€5.08 பில்லியன்), நிலையான நகர்ப்புற மேம்பாடு (€3.16 பில்லியன்), இயற்கை வளங்கள் மற்றும் விவசாய மேலாண்மை (€435 மில்லியன்) மற்றும் பிற நடவடிக்கைகள், குறிப்பாக தொழில் பயிற்சி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு (€568 மில்லியன்) ஆகிய மையப் பகுதிகளில் ஜெர்மனி ஏற்கனவே இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது. ஜேர்மனி தனது புதிய கடமைகளில் எரிசக்திக்காக 713 மில்லியன் யூரோக்கள், நகர்ப்புற வளர்ச்சிக்காக 409 மில்லியன் யூரோக்கள் மற்றும் விவசாய சூழலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கு 90 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டங்கள் சூரிய மின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் இலக்குகளை ஆதரிப்பதை உள்ளடக்கும்.