தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் மிகவும் தீவிரமாக தொடர்ந்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு உணவு பொருட்களின் விலைச்சல் மற்றும் உற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை மிகவும் உயர தொடங்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஒரு தக்காளியின் விலை 100 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. 


 


குறிப்பாக சென்னையில் ஒரு கிலோ தக்காளியிவின் விலை 120 ரூபாய் முதல் 135 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களிலும் தக்காளியின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் தக்காளியின் விலை என்னென்ன?


பாகிஸ்தான்:


இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானில் தற்போது தக்காளியின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300-320 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது அது 400 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. எனினும் பாகிஸ்தான் அரசு சார்பில் ஒரு கிலோ தக்காளி 253ரூபாய்க்கு தான் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 


இலங்கை:


இந்தியாவின் மிக அருகே உள்ள தீவுநாடு இலங்கை. இங்கும் தக்காளி வரத்து குறைந்துள்ள காரணத்தால் கடந்த சில மாதங்களாக தக்காளியின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. அங்கு சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 140-355 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் குறைந்தபட்சமாக 140 ரூபாய்க்கும் மற்ற இடங்களில் அதிகபட்சமாக 355 ரூபாய் வரைக்கும் தக்காளி விற்கப்படுகிறது. 


பங்களாதேஷ்:


மற்ற அண்டை நாடுகளை போல் பங்களாதேஷிலும் தக்காளியின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. அங்கும் சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 




இந்தியாவில் விலை உயர்விற்கு காரணம் என்ன?


இந்தியாவில் தக்காளி விலை வேகமாக உயர ஒரு சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதன்படி பல மாநிலங்களில் உயர்ந்துள்ள பெட்ரோல் மற்றும் டிசல் விலைகள் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் தக்காளி செடிகள் நாசமாகியுள்ளன. இதனால் தக்காளியின் வரத்தும் குறைந்துள்ளது விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஹரியானா,உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெய்து வரும் மழையும் தக்காளி விலை உயர் ஒரு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். 


உலகளவில் தக்காளி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் 19.75 மில்லியன் டன் தக்காளிகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க: பால் மட்டும் இல்லை நான் தண்ணீரும் குடிப்பேன்...- கருப்பு நாக பாம்பின் வைரல் வீடியோ!