அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கையின் கலாச்சார மரபு ரீதியான கட்டமைப்புகள் உடைக்கப்பட்டு மேலத்தேய கலாச்சாரம் புகுத்தப்பட்டு, இன்றும் அதற்குப் பலர் அடிமையாகி வெளிவர முடியாமல் பல குடும்பங்கள் திணறி வருகின்றன. இளைஞர்கள், இளம்பெண்கள் இடையே பரவியுள்ள குடி போதைப் பழக்கம், என புனர்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு என்றுமில்லாதவாறு இலங்கையை உலக நாடுகளிடையே முகம் சுழிக்க வைத்து இருக்கிறது. இறுதி யுத்தம் நடந்து முடிந்த பின்னர் ,பத்து வருட கால இடைவெளியில் இலங்கை கண்ட அபிவிருத்தி இதுதானா? பொதுவெளிகளில் களியாட்ட விடுதிகள் ,மதுபான விடுதிகள் என இலங்கை சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதாக கூறி ஒரு தலைமுறையை சீரழித்தது ஆட்சியாளர்களின் திறமான ஆட்சிக்கான சான்றாகும்.
ஒரு குடும்பத்தில் நான்கு சுவருக்குள் என்ன நடக்க வேண்டுமோ, அது இன்று இலங்கையின் பொது வெளியில் நடந்து வருவது மிகவும் ஒரு அடிமட்ட கலாச்சார சீரழிவை நோக்கி இலங்கை சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிகின்றது . மேலும் என்றும் இல்லாதவாறு இலங்கையில் அதிகரித்த மறுவாழ்வு புனர்வாழ்வு முகாம்கள்.. இவை என்ன என்று ஆராய்ந்து பார்த்தோமேயானால் முழுவதுமாக போதைக்கு அடிமையாகி சீரழிந்தவர்களை மீட்டெடுக்கும் நிறுவனம் என கூறுகிறார்கள். இளைஞர்களுக்கு தனியாக புனர்வாழ்வு முகாம், இளம்பெண்களுக்கு தனியாக புனர்வாழ்வு முகாம் அமைக்கப்பட்டு தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை கண்கூடாக காண முடிகிறது .
இலங்கையில் கடந்த பத்து வருட இடைவெளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போதை புனர்வாழ்வு மையங்கள் நான்கு இடங்களில் தொடங்கப்பட்டன. ஆனால் அது இன்று பரந்து விரிந்து இலங்கை முழுவதும் புனர்வாழ்வு மையங்கள் அமைக்கும் அளவுக்கு போதைப் பொருள்கலாச்சாரம் என்பது இலங்கையில் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் கடந்த மூன்று வருடங்களோடு ஒப்பிடும்போது மேலும் இந்த புனர்வாழ்வு மையங்கள் அதிகரிப்பதை காண முடிகிறது. போதைக்கு அடிமையாகி தமது வாழ்வையும், குடும்பங்களையும் இழக்கும் இலங்கை சேர்ந்த இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லப்படுகிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த புனர்வாழ்வு முகாம்கள் அதிகளவாக காலி (உனவட்டுன), கொழும்பு, நிட்டாம்புவ, கண்டி(பேராதனை), பொலன்னறுவை (கந்தக்காடு) என சிங்கள பிரதேசங்களை அதிகளவாக மையப்படுத்தியே ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.
இதில் பெரும்பான்மையான சிங்களப் பகுதியான காலி பிரதேசத்தில் உள்ள உனவட்டுன என்ற இடத்தில் பெண்களுக்கென தனிப்பட்ட முறையில் போதை புனர் வாழ்வு முகாம் அமைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு புள்ளி விவரத்தை பார்க்கும்போது, சுமார் 3000 பேர் வரையில் இந்த புனர்வாழ்வு முகாம்களில் வருடம் தோறும் சிகிச்சை பெற்று வெளியேறுவதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிகளவான சிங்கள இளைஞர் யுவதிகள் இந்த புனர் வாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவே சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த நிலை மாறுபட்டு கடந்த மூன்று வருடங்களுக்குள் தமிழ் இளைஞர்கள் யுவாதிகளும் இந்த போதை பழக்கங்களுக்கு அடிமையாகி தமது வாழ்வை இழந்து போதை புனர்வாழ்வு மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் தற்போது குறிப்பிட்ட அளவு இந்த புனர்வாழ்வு மையங்கள் வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளிலும் அமைக்கப்பட்டு இருப்பதாகவே கூறப்படுகிறது. இங்கு போதை என்று குறிப்பிடுவது குடிப்பழக்கத்தை மட்டுமல்ல ,அதாவது மதுபானம் மட்டுமல்ல ,கஞ்சா ,அபின், ஹெரோயின் மற்றும் பல வகை போதைப் பொருட்களுக்கு இலங்கையின் இளைய தலைமுறை முற்று முழுவதுமாக பாதிக்கப்பட்டு அவற்றுக்கு அடிமையாகி உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இவை கடந்த பத்து வருட யுத்த வெற்றி களியாட்ட கொண்டாட்டத்தில் நாட்டுக்குள் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த சீதனமே இந்த போதைப் பொருட்கள்.
இன்று குறிப்பிட்ட சில சிங்கள அரசியல்வாதிகளால் பெரும் பான்மையான பணத்தை ஈட்டுவதற்காக உள் நுழைக்கப்பட்ட இந்த போதை பொருட்களால் ஒரு சமூகமே சீரழிந்து போவதை கண்முன்னே பார்க்க முடிகிறது. ஆனால் இன்று இந்த அரசியல்வாதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல ,தங்கள் பிள்ளைகள் இவற்றுக்கு அடிமையாகி சீரழிவதை கண்கூடாக பார்த்து தண்டனையையும் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு போதை மறுவாழ்வு முகாமிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகிறார்கள் . குறிப்பாக பொலன்னறுவை கந்த காடு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதை புனர்வாழ்வு பெற்று வருகிறார்கள். அவர்களில் இரு குழுக்களாக பிரிந்து தாக்கிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 600 பேர் தப்பி ஓடிய சம்பவம் நேற்று இலங்கையில் பதிவாகியது.
இதில் பெரும்பாலானோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 200க்கும் மேற்பட்டோரை மீண்டும் அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
மேலும் புனர்வாழ்வு முகாம்களிலும் போதை பொருட்கள் பாவனை நடைபெறுவதாக அறிய முடிகிறது. ஆதலால் புனர்வாழ்வு பெற வேண்டியவர்கள் மீண்டும் மீண்டும் போதைக்கு அடிமையாகும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக புனர்வாழ்வு முகாமுக்கு உள்ளேயே இவர்கள் உயிர்போகும் அளவுக்கு தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றன. கடந்த பத்து வருடத்தில் இலங்கையின் ஆட்சியாளர்களால் அபிவிருத்தி என்ற பெயரில் உள்நுழைக்கப்பட்ட களியாட்ட விடுதிகள், போதை பொருட்கள், அளவுக்கு மீறிய சுதந்திரம் என ஒரு நாட்டின் எதிர்கால சந்ததியினரை முற்று முழுதாக சீரழிக்க தொடங்கி இருப்பதை காண முடிகிறது . இதற்கு தமிழர் பகுதி சிங்கள பகுதி என்று எதுவுமே விதிவிலக்கல்ல. இவ்வாறு கடந்த 2008ஆம் ஆண்டு முதல், யுத்த வெற்றிக் கொண்டாட்டம் என்று தொடங்கி தற்போது வரை நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளி விட்டு இருக்கிறார்கள் இலங்கையின் ஆட்சியாளர்கள். தற்போது சிங்கள பகுதிகள் மட்டுமல்ல தமிழர் பிரதேசங்களான வடக்கு கிழக்கு மற்றும் இந்திய வம்சாவளி மக்கள் வாழும் மலையகம் கண்டி பகுதிகளில் இந்த புனர்வாழ்வு முகாம்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக செய்திகளில் காண முடிகிறது.
அது மட்டுமல்ல இலங்கையின் பெரும்பான்மையான பாடசாலைகளில் இந்த போதை பொருட்கள் உள் நுழைந்து மாணவர்களும் இதற்கு அடிமையாகி இருக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றுக்கும் இலங்கையின் ஆட்சியாளர்கள் தான் காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. பொருளாதார மீட்சி என்ற பெயரில் யுத்த பாதிப்பிலிருந்து நாட்டை கட்டி எழுப்புவோம் என சபதமெடுத்து இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்த மிகப்பெரும் அபிவிருத்தி இந்த போதைப் பொருள் விற்பனை. இதற்கு சிறந்த உதாரணம் தான் அவ்வப்போது இந்திய தமிழக கடற்பரப்பில் படகுகளுடன் பிடிபடும் போதைப் பொருட்களும் அதன் கடத்தல்காரர்களும். ஒவ்வொரு மாதமும் கேரள கடற்பரப்பு தமிழக கடற்பரப்பிலிருந்து படகுகளில் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான போதைப்பொருள் கடத்தும் சம்பவங்கள் பதிவாகி இருப்பதை நாம் காண முடிகிறது. தற்போது இலங்கையில் பெரிய அளவிலான ஒரு பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாகவே இந்த போதைப் பொருள் பாவனை காணப்படுகிறது . ஆனாலும் ஒரு நாட்டின் தலைமுறை அழிக்கப்படுவதை எல்லோரும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொன்றாக புகுத்தப்பட்டு அழிவின் விளிம்பில் இன்று இலங்கை நிற்பது கவலைக்குரியதே.