இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடங்கியது, முதலே அந்நாட்டு மக்கள் , அரசாங்கத்திற்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் முதல் வெற்றி தான் முன்னாள் இலங்கையின் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ ,பிரதமர் பதவியை ராஜனாமா செய்து வீட்டிற்கு சென்றது. இருந்த போதிலும் மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியான கோத்தபாய ராஜபக்ஷ இன்னும் இலங்கையின் அதிபர் பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில் அதிபர் பதவியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி  கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து தலைநகரான கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் ஈடுபடுவோர் இலங்கையில் பெரும்பான்மையான மக்களாக கருதப்படும் ,மஹிந்த ராஜபக்சவினரால் கொண்டாடப்பட்ட சிங்கள மக்களே தான் அந்த குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களில் களமிறங்கி இருக்கிறார்கள். இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினரை  ஆட்சி அரியணை ஏற்றி அழகு பார்த்தவர்களும் இந்த சிங்கள மக்கள்தான். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால்  ராஜபக்ஷ குடும்பத்தினர் தங்களுக்கு இழைத்த துரோகத்தை அறிந்த சிங்கள மக்கள் அவர்களுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்க தொடங்கினர். மேலும் "கோட்டா கோ காம" என்ற முழக்கத்துடன் கோத்தபாய ராஜபக்சவை வீட்டுக்கு செல்லுமாறு வலியுறுத்தி கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 



 

மேலும் இருந்தபோதும் இது எவற்றுக்கும் செவி சாய்க்காத கோத்தபய ராஜபக்ஷ பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி உலக நாடுகளிடம் தஞ்சமடைந்திருக்கிறார். கொஞ்சமும் சளைக்காத சிங்கள பெரும்பான்மை மக்கள் தமது போராட்டங்களை கைவிடுவதாக இல்லை. அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கையின் அதிபராக கோத்தபாய ராஜபக்ஷ இருக்கும் வரையில் உதவிகள் எதுவும் கிடைக்காது என மூத்த அரசியல்வாதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிபராக கோத்தபாய ராஜபக்சே நீடிக்கும் வரையில் எந்த உலக நாடுகளும் உதவ முன் வராது என அவர் கூறியுள்ளார். இதற்கு ஒரே வழி அரசை கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்துவதே என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மீண்டும் மக்களால் தெரிவு செய்யப்படும் ஒரு சிறந்த அரசியல் தலைவரால் இலங்கையை மீளக் கட்டி எழுப்ப முடியும் என மக்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இலங்கை மூத்த அரசியல்வாதியும் அரசை கலைத்து தேர்தல் நடத்துவதே நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப சிறந்த வழியாக இருக்கும் என தெரிவித்திருப்பது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கோத்தபாய ராஜபக்ஷ நாட்டின் தலைவராக இருக்கும் வரையில் உலக நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வராது என லக்ஷ்மன் கிரியல்ல கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஒன்று, ராஜபக்ச குடும்பத்தினரை உலக நாடுகள் நம்புவதற்கு தயாராக இல்லை? இரண்டு ,சில குறிப்பிட்ட நாடுகளிடம் இலங்கையை பங்கு போட்டு தாரை வார்த்தது? மூன்று, ஒரு சில நாடுகளிடம் ராஜபக்ஷ குடும்பத்தினர் மிக நெருக்கமாக நட்பு பாராட்டுவது? நான்கு, குறித்த சில நாடுகளிடம் அதிக அளவில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல்  திணறுவது? மேலும் ஐந்து, யுத்தம் முடிந்தது முதல் தற்போது வரை இலங்கையில் நிலவும் குழப்பமான ஒரு அரசியல்? என இவ்வாறான பல காரணங்களை  முன்வைத்து உலக நாடுகள் இலங்கை மீதான நம்பகத்தன்மையை இழந்திருக்கலாம் . இவ்வாறான காரணங்களால் உலக நாடுகள் முழுமூச்சாக இலங்கைக்கு உதவாமல் பின் வாங்குகின்றனவா? என கேள்வி எழுப்பப்படுகிறது. இலங்கையில் யுத்தம்  நடந்தேறிய காலம் முதலே தற்போது வரை இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சிறிது சிறிதாக சீர்குலைந்து, தற்பொழுது பெரிய அளவிலான பொருளாதார அழிவை ஏற்படுத்தியிருக்கிறது.

 



 

தற்போது நாடு ஒரு அறிவிக்கப்படாத முடக்க நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் தொடர்ந்து   மூடப்பட்டுள்ளன. அரசின் சேவைகள் முற்றிலுமாக முடங்கி ,தற்போது சுகாதாரத் துறையும்  பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இலங்கையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்திருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வயோதிகர்கள், நோயாளிகள் ,கர்ப்பிணிகள் சிறுவர்கள், அவசர மருத்துவ சேவை தேவை உடையோர் என இவர்களின் நிலை என்னவாக இருக்கும்? நாட்டின் சுகாதார துறையும் முற்றும் முழுவதுமாக முடங்குமானால் இலங்கை  பெரிய அளவிலான இழப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பது விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் இலங்கையிலுள்ள ஜனாதிபதி முறைமையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதும் பலரது  வேண்டுகோளாக இருக்கிறது.

 

இலங்கையில் பதவிக்கு வரும் அதிபர்கள் அவர்களது ஆட்சிக்கு ஏற்றவாறு அவ்வப்போது அரசியல் சட்ட திருத்தங்களை மாற்றி சில முக்கிய துறைகளையும் பொறுப்புகளையும் தமக்கேற்றவாறு கையாள்வதால் நாட்டின் நம்பகத்தன்மை ,சமநிலை என்பன இவ்வாறு சீர் குலைந்து போவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இலங்கையில் யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய இன்னும்  இன்னும் பல வருடங்கள் செல்லும் என கணிக்கப்பட்ட நிலையில், இவ்வாறான ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியானது. இலங்கையின் ஸ்திரத்தன்மையை முழுவதுமாக வலுவிழக்க செய்திருக்கிறது. இன்னும் இலங்கையின் வடக்கு பகுதியில் , ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வளையங்களாக அன்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தற்போதும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . இவ்வாறான ஒரு சூழ்நிலையில்  மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் ,அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு இறுதித்தீர்வாக அமைவது மக்களின் வேண்டுகோளை ஏற்று அதிபர் பதவியை  ராஜினாமா செய்துவிட்டு புதிய தேர்தலை நடத்துவதே சிறந்தது என கூறப்படுகிறது.