உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பயணம் செய்த ஒரு நாள் கழித்து, ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின்  மேற்கத்திய நாடுகள் மீது தொடர்ச்சியாக சில குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.  தனது குற்றச்சாட்டில்  மேற்கு நாடுகள் போரைக் கட்டவிழ்த்துவிடுவதாகவும் கத்தோலிக்க மற்றும் குடும்ப விழுமியங்களை சீர் குலைப்பதாகவும் அவர் சாடினார்.


செவ்வாயன்று ரஷ்ய ஃபெடரல் அசெம்பிளியின் முன் நாட்டுக்காக நிகழ்த்திய மாநில உரையில், புடின் கூறுகையில், "இங்கிலாந்தின் சர்ச்சுகள் அண்மையில் பாலின நடுநிலைமையான கடவுளை உருவாக்குவது குறித்து விவாதித்து வருகிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே புரியவில்லை. மற்றொரு பக்கம் தன்பாலீர்ப்பு திருமணங்களை ஆதரித்து சட்டம் இயற்றி வருகிறார்கள். இது குடும்ப அமைப்புகளை சீர்குலைக்கும் முயற்சி" என்று புடின் கூறினார்.


"அவர்கள் குடும்பம் என்ற நிறுவனத்தை அழித்து வருகின்றனர். அவர்களின் கலாச்சார-வரலாற்று அடையாளம் தொடர்பான பல்வேறு வக்கிரங்களை இது வெளிப்படுத்துகிறது. மற்றொரு பக்கம் இதனால் பாதிரியார்கள் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரித்து நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குடும்பம் என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான ஒன்றியம் ஆகும்" என்று புடின் கூறினார்.


கடந்த ஒரு ஆண்டு காலமாக ரஷியா, உக்ரைன்  ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றுள்ளார்.


பல கேள்விகளுக்கு வழிவகுத்த பைடன் பயணம்:


உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக, அமெரிக்க அதிபர் அங்கு சென்றிருப்பது சர்வதேச அரங்கில் பல கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. 


கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது, ரஷிய படையெடுப்பின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு பைடன் அங்கு சென்றிருக்கிறார். 


உண்மையில், பைடனின் பயண திட்டத்தின்படி, அவர் போலாந்துக்கு செல்லவிருந்தார். ஆனால், அவர் திடீரென உக்ரைன் தலைநகருக்கு சென்றுள்ளார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் பைடன் கீவ் நகரில் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.


உக்ரைன் பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பைடன், "உக்ரைனின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான எனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியை சந்தித்து மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக கீவ் சென்றுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.


பைடனின் திடீர் பயணத்தை பாராட்டியுள்ள செலன்ஸ்கி, "ஜோசப் பைடன் கீவ்வுக்கு வருக! உங்கள் வருகை அனைத்து உக்ரைனியர்களுக்கும் உங்களின் ஆதரவின் மிக முக்கியமான சமிக்ஞையாகும்" என்றார்.


பைடன் பேசியது என்ன?


பைடன், செலன்ஸ்கி ஆகியோர் என்ன பேசினார்கள் என்பது குறித்து உக்ரைன் அதிபர் மாளிகையின் தலைமை ஆலோசகர் மிஹைலோ பொடோலியாக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


"ரஷியா கண்டிப்பாக தோற்றுவிடும். ரஷிய அதிபர் புதினும் அவரது கூட்டாளிகளும் சோர்வாகிவிடுவார்கள். தேவையான அனைத்து ஆயுதங்களும் அளிக்கப்படும். அதில், எந்த வித சமரசமும் இல்லை" என பைடன் செலன்ஸ்கியிடம் கூறியதாக மிஹைலோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


கடந்த 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அமெரிக்காவிற்கு சென்றிருந்த நிலையில், ஜோ பைடன் உக்ரைனுக்கு வருகை புரிந்துள்ளார். அமெரிக்காவிற்கு சென்றிருந்த போது, ​​செலன்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆதரவு தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்தாண்டு, ஜனவரி மாதம், மற்றொரு அமெரிக்க செனட்டர்கள் குழு உக்ரைன் அதிபர் மற்றும் பிற அதிகாரிகளை கீவ்வில் சந்தித்தது.


அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களான லிண்ட்சே கிரஹாம், ரிச்சர்ட் புளூமெண்டால் மற்றும் ஷெல்டன் வைட்ஹவுஸ் ஆகியோர் செலன்ஸ்கியை அதிபர் மாளிகையில் சந்தித்தனர். உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது