Continues below advertisement

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போர் வெடித்ததில் இருந்து, இதுவரை 70,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை என்ன.?

அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட பலவீனமான போர்நிறுத்தம் பெரும்பாலும் நீடித்தாலும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

இது குறித்து காஸாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70,100 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த அக்டோபர் 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 354 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 48 மணி நேரத்தில், காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு இரண்டு உடல்கள் வந்தடைந்ததாகவும், அவற்றில் ஒன்று இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு, 299 உடல்கள் தொடர்பான தரவுகள் அதிகாரிகளால் செயலாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதால்தான், கடைசி இறப்பு எண்ணிக்கையில் இருந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா போர்

கடந்த 2023 அக்டோபர் மாதம் 7-ம் தேதி, இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலால் காசா போர் தொடங்கியது. இதன் விளைவாக, 1,221 பேர் கொல்லப்பட்டனர். அன்று, போராளிகள் 251 பேரை காசாவிற்குள் கடத்தினர். சமீபத்திய போர் நிறுத்தத்தின் தொடக்கத்தில், போராளிகள் 20 உயிருள்ள பணயக் கைதிகளையும், இறந்த கைதிகளின் 28 உடல்களையும் வைத்திருந்தனர்.

அதன் பின்னர் உயிருடன் இருந்த அனைத்து பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுவித்து, இறந்த 26 பணயக் கைதிகளின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு பதிலாக, இஸ்ரேல் தனது காவலில் இருந்த கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவித்து. மேலும், நூற்றுக்கணக்கான இறந்த பாலஸ்தீனியர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளது.

போர் நிறுத்தத்திலும் தாக்குதல்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேல் போர் நடைபெற்று வந்தது. அந்த போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பால், ஒருவழியாக சமீபத்தில் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதற்காக ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச திட்டத்தில் சிலவற்றை ஹமாஸ் எற்காவிட்டாலும், போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, இரு தரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனாலும், போர் நிறுத்தத்தை மீறுவதாகக் கூறி, இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. அதிலும், இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தான், தற்போது பலி எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்ததாக காசா சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.