அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக, கொலராடோவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான இரவு விடுதியில் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர்.


இந்நிலையில், அமெரிக்கா வெறுப்பை சகித்து கொள்ளக் கூடாது, சகித்து கொள்ளவும் முடியாது என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


துப்பாக்கிச்சூடு குறித்து பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பான இடங்களாக கருதப்படும் இடங்களை ஒருபோதும் பயங்கரவாத மற்றும் வன்முறை இடங்களாக மாற்றக்கூடாது. இருப்பினும், இது மிகவும் அடிக்கடி நிகழ்கிறது.


LGBTQI+ பிரிவு மக்களுக்கு எதிரான வன்முறைக்கு பங்களிக்கும் ஏற்றத்தாழ்வுகளை நாம் வெளியேற்ற வேண்டும். அமெரிக்காவால் வெறுப்பை சகித்து கொள்ள முடியாது. சகித்து கொள்ளக் கூடாது" என தெரிவித்துள்ளார்.


மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், "துப்பாக்கி வன்முறை என்ற தொற்றுநோயை நாம் அனைத்து வடிவங்களிலும் தீர்க்க வேண்டும். ஏறக்குறைய, முப்பது ஆண்டு கால வரலாற்றில், முக்கித்துவம் வாய்ந்த துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தில் நான் கையெழுத்திட்டுள்ளேன். ஆனால், இன்னும், நிறைய செய்ய வேண்டும்.


கொலராடோ ஸ்பிரிங்ஸில் இந்த முட்டாள்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து பேரின் குடும்பங்களுக்காகவும் காயமடைந்தவர்களுக்காகவும் ஜில் மற்றும் நானும் பிரார்த்தனை செய்கிறோம்.


இந்தத் தாக்குதலில் எந்த உள்நோக்கமும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், துப்பாக்கி வன்முறை நம் நாடு முழுவதும் உள்ள LGBTQI+ சமூகங்களில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் அறிவோம்" என பதிவிட்டுள்ளார்.


துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசியுள்ள கொலராடோ ஸ்பிரிங்ஸ் காவல்துறை தலைவர் அட்ரியன் வாஸ்குவேஸ், "கிளப்புக்கு சென்றவர்கள் ஹீரோ போல் செயல்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தடுத்தி நிறுத்தினர்.


குறைந்தது இரண்டு பேர் துப்பாக்கிதாரியை எதிர்கொண்டு சண்டையிட்டு மேலும் வன்முறையைத் தடுத்தனர். அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்" என்றார்.


ஆண்டர்சன் லீ அல்ட்ரிச் என்ற 22 வயது இளைஞனை சந்தேக நபராக போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இரவு விடுதிக்கு வந்திருந்தவர்கள் மீது நீண்ட ரைபிளை கொண்டு அவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு தொடங்கிய சிறிது மணிநேரங்களிலேயே அவர் காவல்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டார்.


சமீபத்தில், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


கடந்த 2016 ஆம் ஆண்டில், புளோரிடாவின் ஆர்லாண்டோவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான இரவு விடுதியில் துப்பாக்கிதாரி ஒருவர் 49 பேரைக் கொலை செய்தார். பின்னர், அவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்காவில் நடைபெற்ற மோசமான துப்பாக்கிச்சூடுகளில் இதுவும் ஒன்று.