ஆப்பிரிகாவின் நைஜர் நாட்டை தொடர்ந்து கபோன் நாட்டிலும் அதிபரை பதவிநீக்கம் செய்து ராணுவத்தினர் ஆட்சியை பிடித்துள்ளனர். 


கபோன் ( Gabon) அல்லது கபோனியக் குடியரசு என அழைக்கப்படும் நாடு மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வளமான நாடு. இதன் எல்லைகள் ஈக்குவடோரியல் கினியா, காமரூன், காங்கோ குடியரசு மற்றும் கினி வளைகுடா வரை விரிந்துள்ளன. பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த கபோன், 1960ம் ஆண்டு விடுதலை அடைந்து தனி குடியரசு நாடாக அந்தஸ்து பெற்றது. அதில் இருந்து பல கட்சி முறையையும், வெளிப்படையான தேர்தல் முறையையும், ஜனநாயக ஆட்சியும் நடந்து வரும் கபோனில் தற்போது ராணுவ ஆட்சி தலைதூக்கி உள்ளது.


சிறிய மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், அங்குள்ள இயற்கை வளங்கள் ஏராளம். வெளிநாட்டு மூலதனமும் கபோன் நாட்டை மேலும் பலமாக்கி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியானது. அதில், அதிபர் அலி போங்கோ ஓண்டிபா 64% வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாகவும், அடுத்த அதிபரும் அவர்தான் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சந்தோஷம் அடுத்த சில நிமிடங்களியே காதை கிழிக்கும் துப்பாக்கி குண்டுகளின் சத்தத்தால் அடங்கியது. 


அதிபரின் மாளிகையை முற்றுகையிட்ட துப்பாக்கிய ஏந்திய வீரர்கள் அதிகாரப்பூர்வமான மாநில தொலைக்காட்சியில் தோன்றி பகிரங்க அறிவிப்புகளை வெளியிட்டனர். அதிகாரத்தை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். கடந்த 17-ஆம் தேதி கபோனில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது பேசிய அதிபர் போன்கோ, ”சமீபகாலமாக நாட்டில் வன்முறை நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்புக்காக உங்களையும், நமது நாட்டையும் பணயக்கைதிகளாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என கூறி இருந்தார்.


சுதந்திரத்திற்கு பிறகு 56 ஆண்டுகளாக போங்கோ குடும்பத்தினர் கபோன் நாட்டை ஆட்சிசெய்து வந்த நிலையில் தற்போது ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றி இருப்பது, ஆப்பிரிக்காவின் வளைகுடா பகுதிகளில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 





கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்த போங்கோ, நாட்டிற்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் சதித்திட்டம் குறித்து பேசியுள்ளார். இந்த நிலையில் அவரது அதிபர் பதவியில் இருந்து நீக்கி, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 


இதேபோல் கடந்த வாரம் ஆப்பிரிக்காவின் மற்றொரு நாடான நைஜரிலும், அந்நாட்டு அதிபர் முகமது பாசும்மை பதவியில் இருந்து நீக்கி ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினர். கடந்த வாரம் மக்களிடம் பேசிய நைஜர் ராணுவத்தின் தளபதி அமடோ அப்த்ரமேனே, அதிபர் முகமது பதவியை ராஜினாமா செய்ததாகவும், நாட்டின் பாதுகாப்பின்மை, பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நைஜர் நாடு வந்ததும், எல்லைகள் மூடப்பட்டு அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. வான் மற்றும் நில சார்ந்த எல்லை கடந்த போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டன. 


இதற்கெல்லாம் மேலாக நைஜர் நாட்டில் உள்ள அமெரிக்கா, ஜெர்மனி, நைஜீரியா நாடுகளை சேர்ந்த தூதர்கள் உடனடியாக 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என்றும் ராணுவத்தினர் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். நைஜர் ராணுவத்தினரின் இந்த முடிவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ராணுவ அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அதிபர் பாசும்மை விடுவிக்கும்படி கேட்டு கொண்டார். 


நைஜரை தொடர்ந்து கபோன் நாட்டையும் ராணுவத்தினர் கைப்பற்றியதற்கு பிரான்ஸ் கடுமையான எதிர்வினைகளை கூறி வருகிறது. கபோனில் பெரும்பாலான மக்கள் பிரான்ஸை சேர்ந்தவர்கள் என்பதும், அந்நாட்டு மக்களின் மொழி பிரெஞ்சு என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த சில ஆண்டுகளாக நைஜர் மற்றும் கபோன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வந்துள்ளன. நைஜீரியாவை மையமாகக்கொண்ட போகோ ஹராம் என்ற தீவிரவாத குழு நைஜரில்  தாக்குதல் நடத்தி வந்தன. இதனால் பாதுகாப்பில்லாத சூழல் உருவானது. இதை காரணம் காட்டி ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினர். ஏற்கெனவே உக்ரைன், ரஷ்யா போரால் உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. தற்போது நைஜர் மற்றும் கபோனில் போர் மூண்டால் மேலும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.