பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள தனிநபருக்கு, ஒமிக்ரானின் உச்சபட்ச மரபுதிரியான BA.2.86 மாறுபாட்டின் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா நோய்த்தொற்று 2019 ஆம் ஆண்டு பரவத்தொடங்கியது. 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பரவத் தொடங்கிய மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் முதல் அலையை விட இரண்டாம் அலை கொடூரமாக இருந்தது, ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். தினசரி பாதிப்பு என்பது 4 லட்சம் கடந்து இருந்தது. அப்படி இருந்த சூழலில் இருந்து படிப்படியாக மீண்டும் வந்துள்ளது இந்தியா. இருப்பினும் இன்றளவும் உலகில் ஒரு சில நாடுகளின் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுதான் வருகிறது. 


கொரோனா வைரஸ் - BA.2.86 மாறுபாட்டின் முதல் தொற்று கனடா மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு உறுதிபடுத்தியுள்ளது.  பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் கொரோனாவின் BA.2.86 மாறுபாடு கண்டறியப்பட்டது புதிதல்ல என்றும் உயர்மட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று உலக  அளவில் தொடர்ந்து பரவி வருவதாகவும், வைரஸின் மாறுபாடு தொடர்வதாகவும் இதனால் கொரோனா அபாயம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் கூறுகின்றனர்.  கடந்த மாதம் டென்மார்க்கில் முதன்முதலில் இந்த வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டது.


ஒமிக்ரானின் BA.2.86 பரம்பரையானது, XBB.1.5 உடன் ஒப்பிடுகையில் வைரஸின் முக்கிய பகுதிகளில் 35 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டிருப்பதால் உலக நாடுகள் மத்தியில் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. XBB.1.5, 2023 ஆம் ஆண்டின் மிகவும் தாக்கத்தை உண்டாக்கிய மாறுபாடு ஆகும். கனடா மற்றும் டென்மார்க் தவிர, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் BA.2.86 மாறுபாட்டினால் ஏற்பட்ட தொற்றை உறுதிபடுத்தியுள்ளது.  


கடந்த வாரம் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் அறிக்கையின்படி, BA.2.86 மாறுபாடு ஏற்கனவே கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அல்லது கொரோனா தடுப்பூசிகளைப் பெற்ற நபர்களை தாக்கும் திறனை கொண்டது என தெரிவித்துள்ளது. BA.2.86 வைரஸ், 'Pirola' என்ற புனைப்பெயர் கொண்டது. உலக சுகாதார நிறுவனத்தால் இந்த மாறுபாடு (WHO) கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.


DA.2.86 மாறுபாட்டில் உள்ள பிறழ்வுகள் ஸ்பைக் புரதத்தில் 30 க்கும் மேற்பட்டவை அடங்கும். கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே BA.2.86 மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஒரு சில நாடுகளில் கழிவுநீரில் இந்த மாறுபாடு தென்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாறுபாட்டைக் கண்காணிப்பது முக்கியம் என்றாலும், முந்தைய நோய்த்தொற்றுகள் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ள காரணத்தால் இந்த மாறுபாடு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும், இறப்பு விகிதமும் இருக்காது என உலக சுகாதார மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.