பூமியில் இருந்து இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிலவுக்கு மொத்தம் 128 விண்கலங்களை அனுப்பியதில், 57 விண்கலங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம்.


முதன்முதலில் 1958-ல் விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023 வரை கடந்த 65 ஆண்டுகளில், 128 விண்கலங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 71 முயற்சிகள் வெற்றி அடைந்தன. 57 முயற்சிகள் தோல்வியைத் தழுவின. எந்த நாடும் இதுவரை குறைந்தபட்சம் 2 முறையாவது சாஃப்ட் லேண்டிங்கில் தோல்வி அடைந்தபின்தான் அதை வெற்றிகரமாகச் செய்துள்ளன.


முதல் முயற்சியே தோல்வி


முதன்முதலாக அமெரிக்கா 1958-ல் Pioneer 0 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 1959-ல் சோவியத் யூனியன் அரசின் லூனா 2 வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. 6ஆவது முயற்சியில்தான் ரஷ்யா வெற்றிவாகை சூடியது.


1958 முதல் 1959 வரை ஓராண்டுக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டிபோட்டு 14 விண்கலங்களை அனுப்பின. இதில் 3 விண்கலங்கள் வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்டன. 


நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக முதன்முதலில் சந்திரயான் 1 விண்கலம் 2009-ல் அனுப்பப்பட்டது. இதன் மூலம்தான் நிலவில் தண்ணீர் இருக்கும் உண்மை தெரிய வந்தது. 


சந்திரயான் 2


சந்திரயான்- 2 கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் பயணத்துக்குப் பின் நவம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்-2 வெற்றிகரமாக நுழைந்தது, புவி நீள்வட்டப் பாதைக்குள்ளும் வெற்றிகரமாக நுழைந்தது.


எனினும் லேண்டர் விக்ரமில் ஏற்பட்ட சிக்கலால், திட்டத்தின் நோக்கம் தோல்வியில் முடிந்தது. லேண்டரும் ரோவரும் வெடித்துச் சிதறின. ஆர்பிட்டர் மட்டும் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.


 


லூனா 25


கடந்த 1976 ஆம் ஆண்டு ரஷ்யா, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக  லூனா 24 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதற்கு பின் 47 ஆண்டுகள் கடந்து லூனா 25 ஆய்விற்காக அனுப்பப்பட்டது. பயணத்தில் லூனா 25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதனை தொடர்ந்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக் கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், இறுதி சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்ப முடியாமல், தற்போதையை பாதையிலேயே லூனா 25 விண்கலம் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டது.


என்ன காரணம்?


நிலாவில், குறிப்பாக தென் துருவத்தில் தரை இறங்குவது (soft- landings) எவ்வளவு சவாலானது என்பதை லூனா 25 மற்றும் சந்திரயான் 2 ஆகியவற்றின் தோல்விகள் எடுத்துக் காட்டுகின்றன. நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்வதில் தோல்வி என்பது உலக நாடுகளுக்கு ஒன்றும் புதிதில்லை.  


1976-ல் இருந்து இதுவரை சீனா என்ற ஒற்றை நாடு மட்டுமே நிலவில் சாஃப்ட் லேண்டிங்கை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. Chang’e 3 மற்றும் Chang’e 4 ஆகிய விண்கலங்கள் இதைச் செய்து முடித்துள்ளன. பிற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. 


மொத்தத்தில் பூமியில் இருந்து இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிலவுக்கு மொத்தம் 128 விண்கலங்களை அனுப்பியதில், 57 விண்கலங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன.