பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், இந்திய நேரப்படி இன்று இரவு, ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் பாரிஸ் மீது திரும்பியுள்ள நிலையில், அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இப்படிப்பட்ட சூழலில், பிரான்ஸின் அதிவேக ரயில்கள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக விரோதிகள் இணைந்து நடத்திய தாக்குதலின் விளைவாக ஒட்டு மொத்த ரயில்வே போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. 


பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான ரயில்வே நிறுவனமான SNCF, இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "பாரிஸை வடக்கில் இருந்து இணைக்கும் லில்லி, மேற்கிலிருந்து இணைக்கும் போர்டாக்ஸ், கிழக்கில் இருந்து இணைக்கும் ஸ்ட்ராஸ்பேர்க் ஆகிய நகரங்களில் ரயில் பாதைகளை குறிவைத்து தீவைத்து எரித்துள்ளனர்.


அனைத்து பயணிகளும் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், வார இறுதி வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். ரயில்கள் புறப்படும் இடங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.


அட்லாண்டிக், வடக்கு மற்றும் கிழக்கு அதிவேக ரயில் பாதைகளில் SNCF ரயில்கள் பல்வேறு வகையில் தாக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே சேதப்படுத்த வேண்டும் என தீயை வைத்து கொளுத்தியுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில், ரயில்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாரிஸில் 45,000க்கும் மேற்பட்ட போலீசார், 10,000 ராணுவ வீரர்கள், 2,000 தனியார் பாதுகாப்பு ஏஜென்ட்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக தொடர்புடையதா என்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. இதுகுறித்து பாரிஸ் போக்குவரத்து துறை அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரிட் கூறுகையில், "இது ஒரு குற்ற செயல்" என்றார்.


இதற்கு கண்டனம் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஓடியா-காஸ்டெரா, "இது முற்றிலும் பேரதிர்ச்சியாக உள்ளது. விளையாட்டு போட்டிகளை குறிவைப்பது பிரான்ஸை குறிவைப்பதற்கு சமம்" என்றார்.