அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட கமலா ஹாரிஸ்-க்கு ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபரான டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், ஜனநாயக கட்சி சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியின் பைடன், போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸை அதிபராக முன்னிறுத்த ஜனநாயக கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர்.
போட்டியில் இருந்து பைடன் விலகியதை அடுத்த ஒரு சில நாள்களிலேயே, ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராவதற்கான போதுமான ஆதரவு கமலா ஹாரிஸ்-க்கு கிடைத்துவிட்டது. இந்த நிலையில், முன்னான் அதிபரான ஒபாமாவுக்கும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஒபாமா வெளியிட்டுள்ள பதிவில், "இந்த வார தொடக்கத்தில், மிச்செலும் (மனைவி) நானும் எங்கள் நண்பரை கமலா ஹாரிஸை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்றும், அவருக்கு எங்கள் முழு ஆதரவு இருப்பதாகவும் நாங்கள் அவளிடம் கூறினோம்.
நம் நாட்டிற்கு இந்த முக்கியமான தருணத்தில், நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறோம். நீங்கள் எங்களுடன் இணைவீர்கள் என்று நம்புகிறோம்" என பதிவிட்டுள்ளார்.