Srilanka Election: இலங்கையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை அதிபர் தேர்தல்:


ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும், இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் கடைசிக்கட்ட போரின்போது, ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட உள்ளார். அதேநேரம், தற்போதைய அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கேவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. தற்போதைய அதிபரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார நெருக்கடி:


கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, கோத்தபய ராஜபக்ச அதிபராக பொறுப்பேற்றார். ஆனால், அதைதொடர்ந்து தீவு நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்தது. பெட்ரோல் போன்ற எரிபொருட்களை வாங்க, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 


வெடித்த கலவரம்: 


பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் வெடித்தன. நாடு முழுவதும் பதற்றம் நிலவியது. இதனால், கடந்த 2022ம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையின் மோசமான நிலைக்கு ராஜபக்ச குடும்பத்தினர் தான் காரணம் என கூறி, அவர்களது வீடுகளை சூறையாடிய போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினார். இதையடுத்து, ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கையை விட்டே வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இதனிடையே, நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்கே அதிபராகவும், பிரதமராக குணவர்த்தனவும் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கவனம் பெறும் இலங்கை தேர்தல்:


கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளின் ஆதரவால் தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்த சூழலில் நடைபெற உள்ள அதிபர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் அண்டை நாடு மற்றும் நமக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனாவின் நட்பு நாடாகவும் இருப்பதால், இலங்கை தேர்தல் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேநேரம், இந்த தேர்தல் மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் மீண்டும் இலங்கை அரசில் ஆதிக்கம் செலுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.