உலகின் மிகவும் முக்கியமான நகரங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மிகவும் குறிப்பிடத்தக்கது. எப்போதும் பரப்பாக காணப்படும் துபாய் நகரத்தைப் போலவே, துபாய் விமான நிலையமும் எப்போதும் பரப்பாக காணப்படும். பல தொலைதூர தேசங்களுக்கு செல்லும் நாடுகளுக்கு இடையே விமானங்கள் நின்று செல்லும் விமான நிலையமாகவும் துபாய் விமான நிலையம் திகழ்கிறது. கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் முடங்கியிருந்த துபாய் விமான நிலையம் கடந்த சில வாரங்களாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. துபாய் விமான நிலையத்தில் டாக்சி வே மற்றும் ரன் வே என்று இரு ஓடுதள பாதைகள் உள்ளது. இதில் டாக்சி வே ஓடுதளப் பாதையானது விமான நிலைய முனையத்தில் நின்று கொண்டு இருக்கும் விமானங்கள் ஓடுபாதைக்கு செல்லும் பாதையாகும்.
இதில் நேற்று டாக்சி வே ஓடுதள பாதையில் கிர்ஜிஸ்தான் நாட்டின் மனாஸ் நகரத்திற்கு செல்வதற்காக எப்.இசட். 1461 போயிங் ரக விமானம் தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானம் 737-800 நவீன போயிங் ரக விமானமாக உள்ளது. அதே சமயத்தில் கல்ப் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றும் பக்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவிற்கு புறப்படுவதற்காக டாக்சி வேயில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக இரு விமானங்களும் அருகருகே சென்றபோது, இரு விமானங்களின் வால் பகுதிகளும் ஒன்றுடன் ஒன்றுடன் மோதிக் கொண்டன. இதனால், விமானத்திற்கு உள்ளே சிறு அதிர்வு ஏற்பட்டுள்ளது. இரு விமானங்களின் உள்ளேயும் பயணிகள் இருந்தனர். திடீரென விமானம் அதிர்ந்ததால் விமானங்களின் உள்ளே இருந்த பயணிகள் பதற்றத்திற்கு உள்ளாகினர். உடனடியாக இரு விமானங்களின் விமானிகளும் தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விமானங்கள் முனையத்திற்கு மீண்டும் வரவழைக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கப்பட்டு, பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் காரணமாக அந்த ஓடுபாதை தளம் உடனடியாக மூடப்பட்டது. ஓடுதளம், விமானங்கள் ஆகியவற்றின் இயல்பு நிலையை முழுவதும் பரிசோதித்த பிறகு நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்துகொண்ட அதிகாரிகள் 2 மணிநேரத்திற்கு பிறகு இயல்பு நிலை திரும்புவதாக தெரிவித்தனர். ஃபிளை துபாய் நிறுவனம் தங்களது பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தது. மேலும், பயணிகள் அனைவரும் வேறு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தனர். அதேபோல, மற்றொரு விமானமான கல்ப் ஏர் விமான நிறுவனமும் தங்களது பயணிகளிடம் வருத்தம் தெரிவித்தது. மாற்று விமானம் மூலம் பயணிகளை பத்திரமாக அந்த நிறுவனமும் அனுப்பி வைத்தனர்.
இந்த விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், இந்த விபத்து தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.