சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க இருப்பதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது. 


சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று


கடந்த 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட ஹாங்காங்கில் 74 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி நாடாக விளங்கும் ஹாங்காங் சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும். அதிகப்படியான சினிமா படப்பிடிப்புகளும் ஹாங்காங் நாட்டில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்றின் தாக்கம் உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது.


தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியது. இதன் விளைவாக சுற்றுலா செல்லும் எண்ணமே பலரும் இல்லாமல் போய்விட்டது. வகை வகையாக உருமாறிய கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க சீனா விதித்த கொரோனா விதிகளை பின்பற்றிய ஹாங்காங் அரசும் தங்கள் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.


ஹலோ ஹாங்காங் திட்டம் 


இதனால், கடந்த 2022 ஆம் ஆண்டு அந்நாட்டிற்கு வெறும் 6 லட்சம் பேர் மட்டுமே பயணம் மேற்கொண்டு இருந்தனர். தற்போது கொரோனா பரவல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தங்கள் நாட்டிற்கு மீண்டும் சுற்றுலா பயணிகளை அழைத்து வர ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஹலோ ஹாங்காங் என்ற கேப்ஷனுடன் தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட் ஆஃபரை வழங்கியுள்ளது.


இதுதொடர்பாக ஹாங்காங் நாட்டின் தலைவர் ஜான் லீ தெரிவித்த தகவலில், உள்ளூர் விமான நிறுவனங்களான கேதே பசிபிக், எச்.கே எக்ஸ்பிரஸ், ஹாங்காங் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் மூலம் 5 லட்சம் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மார்ச் 1 ஆம் தேதி ஆறு  மாதங்களுக்கு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும், தொடர்ந்து படிப்படியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொடங்கி, சீனா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் விமான நிறுவனங்கள் மூலமாகவும் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேசமயம் உள்ளூர் மக்களை ஊக்குவிக்கும் வகையில் ஹாங்காங்கில் வசிப்பவர்களுக்கு 80 ஆயிரம் விமான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இலவச டிக்கெட்டுகள் பெறுபவர்கள் அங்குள்ள உணவுக்கூடங்கள், போக்குவரத்து ஆகியவற்றில் தள்ளுபடி பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.