France Protests : பிரான்ஸில் 17 வயது சிறுவனை, போக்குவரத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காரில் சென்ற  இளைஞர்


பிரான்ஸின் தலைநகரமான மேற்கு பாரீஸ் புறநகரப் பகுதியான நான்டெர்ரே என்ற பகுதியில் 17 வயது சிறுவன்  காரில் சென்று கொண்டிருந்தார். பாரீஸில் வாடகைக்கு கார் எடுத்த அந்த 17 வயது சிறுவன் நான்டெர்ரே  சாலையில் தனது மூன்று நண்பர்களுடன் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, காரை ஓட்டிச் சென்ற சிறுவன்  போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிகிறது.


 இதனால் சாலையில்  இருந்த போக்குவரத்து போலீஸார் காரை நிறுத்த முயன்றனர். அப்போது ஒரு நிமிடம் காரை நிறுத்திய சிறுவன், உடனே புறப்பட்டார். அந்த நேரத்தில் போலீசார் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, 17 வயது சிறுவனை நோக்கி சுட்டனர்.  உள்ளூர் நேரப்படி இந்த சம்பவம் காலை 9.15 மணிக்கு நடந்தது.


சுட்டுக் கொன்ற போலீஸ்


இதனை அடுத்து, அதிகவேகமாக சென்ற கார், சாலையோராம் இருந்த தடுப்பில் மோதி நின்றது. உடனே காரில் இருந்து ஒருவர் தப்பியோடினார். போலீசார் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த  அந்த 17 வயது சிறுவனை போலீசார் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.





இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரப்படுகிறது. காரில் பயணித்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் காரில் இருந்து தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.  விசாரணையில் உயிரிழந்தது நேல் எம்  என்றும், போலீசார் அவரை மார்பில் சுட்டதாகவும் தெரியவந்துள்ளது.


கொந்தளித்த மக்கள்


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானதும், நான்டெர்ரே பகுதியில் மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் குதித்தனர். கார்கள், பேருந்து நிழற்குடைகளை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். மேலும், நான்டெர்ரே பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு அருகில் பட்டாசுகளை வெடித்துனர்.


இதனை அடுத்து, போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து, நான்டெர்ரே நகர் முழுவதும் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மான் கூறியதாவது, ”17 வயது சிறுவன்  போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.


இதுதொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோக்கள் அதிர்ச்சி அளிக்கிறது. இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தப்படும்” என்றார்.  பிரான்ஸில் வாகன ஓட்டுநர் உரிமம் பெற 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.