கொரோனாவை சீனா தான் உயிரி ஆயுதமாக உருவாக்கியது என, அந்நாட்டில் உள்ள வூகானை சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


”கொரோனாவை சீனா தான் உயிரி ஆயுதமாக வடிவமைத்ததாகவும், அதன் நான்கு வேரியண்ட்களை தனது சக ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கி, அவற்றில் எது வேகமாக பரவுகிறது என பரிசோதிக்கப்பட்டதாகவும், வூகானை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்”


பிரத்யேக நேர்காணல்:


சீனா மற்றும் அங்குள்ள ஆளும்கட்சி தொடர்பான  பிரத்யேக தகவல்களை வழங்கும்  சர்வதேச செய்தியாளர் சங்கத்தின்  உறுப்பினரான  ஜெனிஃபர் ஜெங், வூகானை சேர்ந்த அராய்ச்சியாளர் சாவோ ஷாவோ உடன் பிரத்யேக நேர்காணல் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் தெரிவித்து இருக்கும் பல்வேறு தகவல்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


உருவாக்கப்பட்ட ”கொரோனா வைரஸ்”


26 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த நேர்காணலில் ”தனது பெயரை கொண்ட மற்றொரு ஆராய்ச்சியாளரும், உயர் அதிகாரியுமான சாவோ ஷாவோ தன்னிடம் கொரோனா வைரசின் 4 வேரியண்ட்களை வழங்கினார். அந்த வைரஸ் எவ்வளவு வேகமாக பரவுகிறது, எத்தனை உயிர்களுக்கு வேகமாக பரவுகிறது, மனிதன் உள்ளிட்ட பிற உயிரினங்களை எவ்வளவு எளிதாக கொரோனா தொற்று பாதிக்கிறது என்பதை உயரதிகாரி ஆராய சொன்னதாக” சாவோ ஷாவோ தெரிவித்துள்ளார். அதோடு, கொரோனா வைரஸை உயிரி ஆயுதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


ஆராய்சியாளர்கள் மூலம் பரப்பப்பட்ட கொரோனா வைரஸ்:


”கடந்த 2019ம் ஆண்டு ஊகான் நகரில் நடைபெற்ற உலக ராணுவ போட்டிகளின் போது சக ஆராய்ச்சியாளர்கள் பலர் காணாமல் போயினர். சில மாதங்களுக்குப் பிறகு திரும்பிய அவர்களிடம் கேட்டபோது, சர்வதேச விரர்களின் உடல்நிலை மற்றும் அவர்கள்  தங்கியிருந்த ஓட்டல் அறைகள் சுகாதாரமாக உள்ளனவா என்பதை ஆராய அனுப்பபட்டதாக விளக்கமளித்தனர். அறைகளின் சுகாதாரத்தன்மையை ஆராய வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத நிலையில், அவர்கள் மூலம் கொரோனா தொற்று பரப்பப்பட்டு இருக்கலாம்” எனவும் சாவோ ஷாவோ சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


கைதிகளிடம் சோதனை:


அதோடு, ”2020ம் ஆண்டு ஏப்ரலில் முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்குர் முஸ்லீம்களின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக ஷின்ஜியாங்கிற்கு அனுப்பப்பட்டேன். வைரஸை மனிதர்களுக்கு பரப்பி, அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் கவனிப்பதற்காக தான் அங்கு அனுப்பப்பட்டதாகவும்”  சாவோ ஷாவோ உறுதியாக குறிப்பிட்டார்.


மூடி மறைக்கிறதா சீனா?


உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, பெரும் பொருளாதார சரிவும் ஏற்பட்டது. அதோடு, லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த வைரஸை சீனா தான் திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால், சீனா அதனை தற்போது திட்டவட்டமாக மறுத்து வந்தது. இந்நிலையில் வூகானை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், கொரோனா வைரஸை சீன அரசே உருவாக்கி பரப்பியதாக தெரிவித்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.